அமைச்சர் வார்டில் அதிகாரிகள் அலட்சியம் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகங்கள்; திரும்பிய பக்கமெல்லாம் திறந்தவெளி கழிப்பிடம்

சிவகாசி: திருத்தங்கல் நகராட்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வசிக்கும் வார்டில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதியை பெற்றுள்ளது என்று சொன்னால் அது திருத்தங்கல் நகராட்சியை தான் சொல்ல முடியும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வசிக்கும் நகராட்சி என்பதால் கூடுதல் நிதி ஒதுக்கி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சில அதிகாரிகளின் அலட்சியத்தால், நகராட்சி மக்கள் அரசின் திட்டங்களை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளனர். பெரும்பாலான சுகாதார வளாகங்கள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக அமைச்சர் வசிக்கும் 18வது வார்டில் மூன்று சுகாதார வளாகங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டும் அதனை திறக்காமல் அதிகாரிகள் பூட்டியே  வைத்துள்ளனர். செங்கமலநாச்சியார்புரம் ரோடு, மேலரதவீதி, வெள்ளையாபுரம் ரோடு, சுக்கிரவார்பட்டி ரோடு, முத்துமாரி நகர், கருப்பசாமி நகர், முனியசாமி நகர், வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளை 18வது வார்டு கொண்டுள்ளது. இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிக்காக அடிக்கடி நகராட்சியை முற்றுகையிடுவது, அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்புவது என வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. திறந்தவெளியில் ஓடும் கழிவுநீர், ரோடு, வாறுகால், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி இன்றி வார்டு மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில், ‘முத்துமாரிநகரில் 200 மீட்டர் தூரத்தில் உள்ள மூன்று சுகாதார வளாகங்களும் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலை, ஊரணியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. வாறுகால் கட்டி  13 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. வாறுகால் சேதமடைந்து காணப்படுவதால் கழிவுநீர்தேங்கி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது’ என்றார். முனீஸ்வரி கூறுகையில், ‘வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்குகிறது. பகலிலும் கொசு தொல்லை உள்ளது.

மாலை 6 மணிக்கு மேல் வீட்டை திறக்கவே முடியாத அளவிற்கு கொசு தொல்லை உள்ளது. இரவில் தெருவிளக்கு எரியாததால் விஷபூச்சிகள் தாரளமாக உலா வருகின்றன. முன்பு அடிக்கடி கொசு மருந்து தெளிப்பார்கள். தற்போது கொசு மருந்து அடிக்க யாரும் எங்கள் பகுதிக்கு வருவதில்லை’ என்றார். இதுபற்றி காசியம்மாள் கூறுகையில், ‘முத்துமாரி நகரில் தனியார் பள்ளி அருகே பெண்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். சுகாதார வளாகங்களை திறந்து வைத்தாலே திறந்துவெளி கழிப்பிட பயன்பாடு குறைந்துவிடும்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பேரூராட்சி நடவடிக்கை முத்துப்பேட்டை...