கந்துவட்டி கொடுமையால் விரக்தி எஸ்பி முன்னிலையில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

விழுப்புரம்: கந்துவட்டி பிரச்சனையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விழுப்புரம் எஸ்பி முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே துறிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணரதுரை(32). இவர் நேற்று தனது தாய் செந்தாழம்பூ (60), மனைவி புனிதா(27), மகன் வசீகரன்(08), மகள்கள் ரமாதேவி(05), பிரியதர்ஷினி(03) ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது நுழைவு வாயிலில் அண்ணாதுரை தான் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது தாய் மற்றும் மனைவி, குழந்தைகள் மீதும், தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 6 பேரையும் தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கி தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அண்ணாதுரை கூறுகையில், எனது தந்தை சுப்பிரமணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாலப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கடனாக ரூ.2 லட்சம் வாங்கியிருந்தார். அதில் ரூ.1 லட்சத்தை வட்டியுடன் அடைத்துவிட்டார். மீதமுள்ள ரூ.1 லட்சத்தை கொடுக்காத நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதன்பிறகு அவர் என்னிடம் வந்து உனது தந்தை வாங்கிய கடனை இன்னும் அடைக்கவில்லை.

வட்டியுடன் சேர்த்து மேலும் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு, என்னையும், எனது குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார். இதனால் எனது குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கே மிகவும் அச்சமாக உள்ளது. இதனால் மனமுடைந்து குடும்பத்தோடு தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்தார். மேலும் கந்துவட்டி கேட்டு மிரட்டும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்தார். இதனை கேட்ட எஸ்பி ஜெயக்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் அவர்களை இதுபோன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தேர்தல் படுதோல்வியால் டிடிவி.தினகரன்...