சேலம் குறிஞ்சி மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுடன் ஊழியர்கள் வாக்குவாதம்

சேலம்: சேலத்தில் நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்த குறிஞ்சி மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுடன் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் குறிஞ்சி மருத்துவமனைக்கு இஸ்மாயில்கான் ஏரியின் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்பை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து வரும் 10 ஆம் தேதி ஆக்கிரமிப்புக் கட்டிடம் இடிக்கப்படும் என மருத்துவமனையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. குறிஞ்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, உள் நோயாளிகளுக்கான சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினத்துக்குள் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் நோட்டீஸ் வெள்ளைக் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சைப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் சத்யா தலைமையில் வந்த அதிகாரிகள் குறிஞ்சி மருத்துவமனையை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மருத்துவமனை உரிமையாளரும் ஊழியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் குறிஞ்சி மருத்துவமனை ஆக்கிரமித்துள்ள நிலத்தை அளக்கும் பணியை மேற்கொண்டனர். அத்துடன் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் போலீஸ் பாதுகாப்புடன் வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் குறிஞ்சி மருத்துவமனைக்கு யாரும் சிகிச்சைக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு