ராஜஸ்தான், தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு; முடிவுக்கு வந்தது 5 மாநில தேர்தல்; டிச. 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை

ஐதராபாத்: சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணியுடன் இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் நடமாட்ட இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவு பெற்றுது. இதனையடுத்து இன்றுடன் 5 மாநில தேர்தல்களும் முடிவுக்கு வந்துள்ளது. வருகிற 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ராஜஸ்தானில் 20 ஆண்டு கால பாஜ ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றுமா என்பதும், தெலங்கானா மாநில பிரிப்புக்கு பின் முதன்முதலாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் டிஆர்எஸ் கட்சி, ஆட்சியை தக்க வைக்குமா என்ற பரபரப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதே நாளில் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் துவங்குவதால் அரசியல் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தமாக 2.80 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்காக 32,815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் நக்சல் ஆதிக்கமுள்ள 13 தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 25,000 மத்திய பாதுகாப்புப் படையினர், 20,000 பிற மாநில போலீசார் உள்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மொத்தமாக 1,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்க 446 பறக்கும் படையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். தெலுங்கானாவில் காபந்து முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மக்கள் முன்னணிக்கும், பாஜவுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ராம்கர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் லட்சுமண் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் 189 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 2,274 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 51,596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 259 வாக்குச்சாவடிகள் பெண்களுக்கானவை. பாஜ 199 தொகுதிகளிலும், காங்கிரஸ் 194 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. மொத்தமாக 4.74 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

5 மாநில தேர்தல்கள் முடிவுக்கு வந்தன

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் வருகிற 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியத்திற்குள் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே, அதே நாளில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் துவங்குவதால் நாடு முழுவதும் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தேக்வாண்டோ பயிற்சி முகாம் நிறைவு