மேகதாது திட்டத்துக்கு விரைவில் தமிழக முதல்வர் அனுமதி அளிப்பார் : கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மேகதாதுவில் ஆய்வு செய்த பின் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், கடலில் வீணாக கலக்கக் கூடிய தண்ணீரை சேமிக்கவே மேகதாதுவில் அணை கட்டப்படுவதாகவும், மேகதாதுவில் அணையில் தேக்கப்படும் தண்ணீர் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்துக்கு தர வேண்டிய 177 டி.எம்.சி. காவிர் நீர் நிச்சயம் கிடைக்கும் என்று அவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் கழிவு நீர் எதுவும் கலக்கப்படவில்லை என்றும், மேகதாதுவில் காவிரி நீரை தாம் அள்ளி குடித்ததாக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். மேகதாது திட்டத்துக்கு விரைவில் தமிழக முதல்வர் அனுமதி அளிப்பார் என்றும், மேகதாது திட்டத்தால் கிடைக்கும் பயனை புரிந்துகொண்டு விரைவில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை தமிழக அரசு திரும்பப் பெறும் என்றும் கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தம் காரணமாகவே தமிழக முதல்வர் மேகதாது திட்டத்தை எதிர்க்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக விவசாயிகள் தான் 95% பயன்பெறுவர் என்று மேகதாதுவில் ஆய்வு செய்த பின் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவு தமிழக அரசு, அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதுடன் நேற்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் மத்திய நீர் ஆணையத்தின் ஆலோசனை ஏற்று மேகதாதுவில் அணை கட்டுவதால் ஏற்படும் சாதக-பாதகம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. அதை செயல்படுத்தும் வகையில் இன்று காலை மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் பொதுப்பணி, நீர்பாசனம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் அனுபவம் பெற்ற 11 நிபுணர்கள் குழு மற்றும் அனைத்து மொழி மீடியா பிரதிநிதிகளுடன் மேகதாது சென்று ஆய்வு செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கல்வெட்டில் எம்பி என பெயர் பொறித்த...