விஜய் மல்லையாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு தடையில்லை; அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: விஜய் மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் 10 ஆம் தேதி அளிக்கப்படும் என நீதிபதி எம்மா ஆர்புத்நாட் தெரிவித்துள்ளார். இதனால், விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை முழுவதையும்ம் தந்து விடுவதாகவும், தயவு செய்து வங்கிகள் அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அந்த மனுவில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்குதடை கோரியிருந்தார். இதற்கு உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடையில்லை என்றும், விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விஜய் மல்லையா, நீரவ் மோடியை நாடு...