நாளை முதல் தொடங்கவிருந்த அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மதுரை : மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு நாளை நடக்கவிருந்த தமிழக அரசு மருத்துவர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.    

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் சுமார் 18,000 அரசு மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஊதிய விகிதம் இந்திய அளவில் தமிழகம் 16வது இடத்தில் உள்ளது.கடந்த 18 ஆண்டுகளாக மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மனு

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா என்பவர் கடந்த 3 நாட்களாக நடைபெறும் அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கு தொடர்ந்தார். மேலும் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதியுறுவதாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு அவசர வழக்காக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்


இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பிய நிலையில், வேலைநிறுத்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று  பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு, மருத்துவர்கள் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பல கட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனாலேயே வேலை நிறுத்தப்  போராட்டம் நடத்த முடிவு  செய்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதே போன்று ஊதிய உயர்வு பிரச்சனைகள் மற்ற மாநிலங்களில் எழுந்த போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே நீதிமன்ற கோரிக்கைகளை ஏற்று தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக மருத்துவர்கள் கூறினர். இதனை கேட்ட அரசு தரப்பு ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,மருத்துவர்களின் கோரிக்கைகளை தீர்க்க அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதையும் ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை எப்போது கிடைக்கும், ஊதிய உயர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்தும் சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி...