தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்களை கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டகாரர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ்.அர்ஜூணன் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

மேலும் அவர்கள் மீது குற்றச்சதி, சட்டத்தை மதிக்காத அரசு ஊழியர்கள், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்தும் நோக்கில் போலி ஆவணங்களை உருவாக்குதல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், சிபிஐ விசாரணைக்கு தடை கோரியும் கதிரேசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவானது இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். எனினும், இது தொடர்பாக விளக்கமளிக்க மனுதாரருக்கு 4 வார கால அவகாசம் அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தூத்துக்குடியில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி