நாகர்கோவில்-சென்னைக்கு புதிய ரயில்: ஜனவரி மாதம் முதல் இயக்க முடிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும், கொல்லத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் தினமும் மாலையில் நாகர்கோவில் வழியாக சென்னைக்கு செல்கிறது. இந்த ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். மேலும் பலர் ரயில்களில் இடம் கிடைக்காமல் பஸ்களில் செல்லும் நிலை இருந்து வருகிறது. பண்டிகை காலங்களில் தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மேலும் வாராந்திர சிறப்பு ரயில்களையும் இயக்கி வந்தது. இருப்பினும் பல பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் பஸ்களிலும், சிலர் ரயில்களில் உடன் பெட்டிகளிலும் பயணிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் இயக்க வேண்டும் என குமரி மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் தென்மாவட்ட ரயில் பணிகள் சங்கமும் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளை பார்த்து கோரிக்கை வைத்து வந்தது.

 நாகர்கோவில் கோட்டாரில் கடைகள் அதிக அளவு உள்ளன. வியாபாரம் செய்யும் வணிகள் தங்கள் வசதிக்காக சென்னைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தென்னக ரயில்வே அதிகாரிகளுடன் தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் சூசைராஜ், தலைவர் தேவ் ஆனந்த் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது ஜனவரி மாதம் முதல் சென்னை நாகர்கோவிலுக்கு புதிய ரயில் இயக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

 இது குறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் சூசைராஜ் கூறியதாவது: தென்மாவட்ட ரயில் பணிகள் சங்கம் கடந்த 5 வருடகாலமாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும் 2 ஆயிரம் பயணிகளிடம் கையெழுத்து பெற்று கொடுத்தோம். கல்வி, வேலை, வியாபாரம் சம்பந்தமாக சென்னை வந்து செல்லும் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மாவட்ட மக்கள் தேவையான ரயில் இல்லாமல் அவதி அடைந்து வருவதாக அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். இந்நிலையில் கடந்த 5ம் தேதி தென்னக ரயில்வே அதிகாரியை சந்தித்து பேசும்போது, ஜனவரி மாதம் முதல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தினசரி ரயில் இயக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். என்றார். இந்த ரயில் வரும் பட்சத்தில் குமரி மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நாகர்கோவில் தாம்பரம் இடையே ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு