மேட்டுப்பாளையத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: ரயில் பஸ்சை பொலிவுபடுத்த முடிவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கல்லாறு இடையே ரயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து, திருச்சி பொன்மலையில் ரயில் பஸ் பொலிவுபடுத்தப்பட உள்ளது.கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கல்லாறில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் இன்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூர்-ஊட்டி இடையே ரயில் பஸ் இயக்க சேலம் ரயில்வே கோட்டம் முடிவு செய்தது.  இதற்காக குஜராத்தில் இயக்கப்பட்டு வந்த ரயில் பஸ், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த ரயில் பஸ் கடந்த 1998ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது டீசலில் இயக்கப்படுகிறது. 60 இருக்கைகள் கொண்ட இந்த ரயில் பஸ் முன்னும் பின்னும் 2 டிரைவர்களால் இயக்கப்படும் வகையில் அமைந்துள்ளது.
 இந்நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் கல்லாறு இடையே ரயில் பஸ் இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சேலம் கோட்ட சீனியர் பொறியாளர்கள் முகுந்தன், அரவிந்தன், கோச் பொறியாளர் முகமதுஅஸ்ரப், குன்னூர் ரயில் நிலைய மேலாளர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால் ரயில் பஸ், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுப்பி நவீன தொழில்நுட்பத்துடன் மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு கண்ணை கவரும் வகையில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மேட்டுப்பாளையம் அருகே காப்பு காட்டில் சித்ராபவுர்ணமி விழா கொண்டாட தடை