உதகையில் உள்ள உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூடக்கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: உதகமண்டலத்தில் உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூடக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் முதல்வர் எழுதிய கடிதத்தில், நீலகிரி மாவட்டம்  உதகமண்டலத்தில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையம், 1957-ம் ஆண்டு துவங்கப்பட்டு 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். நோய் தாக்குதலுக்கு இலக்காகாத உருளைகிழங்கு விதைகளை  உருவாக்கும் இந்த மையத்தை மூட மத்திய விவசாயத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதை முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்த மையத்தை மூடினால், தென் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தென் மாநில விவசாயிகள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும். ஜலந்தர் ஆய்வு மையம் உருவாக்கும்  உருளைக்கிழங்கு ரகம் தென் மாநிலங்களுக்கு ஏற்றதல்ல என்றும் வட மாநில ரகங்கள் இங்கு பயன்தராது என்றும்  தெரிவித்துள்ளார். மேலும் உருளைக்கிழங்கு மத்திய ஆய்வு மையத்தை மூடும் முடிவை கைவிடுமாறும்,  மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மூடி அமைக்காததால் கீழே விழுந்து பலர்...