தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடலில் கடந்த வாரம் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வட கடலோர மாவட்டங்கள் வழியாக தரைப்பகுதியை கடந்து கேரளா சென்று விட்டது. இதனால் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் 9-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இதற்கிடையே குமரிக் கடல் மற்றும் தென் கிழக்கு அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிக்கும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பருவமழை குறைந்ததனால் காலிபிளவர் வரத்து சரிவு