பாகிஸ்தானுடன் 3வது டெஸ்ட் நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 229 : 89 ரன் விளாசினார் வில்லியம்சன்

அபு தாபி: பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்துள்ளது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ராவல், லாதம் களமிறங்கினர். லாதம் 4 ரன்னில் வெளியேற, ராவல் - கேப்டன் வில்லியம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தது. ராவல் 45 ரன் (82 பந்து, 4 பவுண்டரி) எடுத்து யாசிர் ஷா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ராஸ் டெய்லர் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். நிகோல்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து 72 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், வில்லியம்சன் - வாட்லிங் ஜோடி 5வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 104 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வில்லியம்சன் 89 ரன் (176 பந்து, 7 பவுண்டரி) விளாசி ஹசன் அலி பந்துவீச்சில் ஆசாத் ஷபிக் வசம் பிடிபட்டார். கிராண்ட்ஹோம் 20, சவுத்தீ 2 ரன் எடுத்து பிலால் ஆசிப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 90 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்துள்ளது. வாட்லிங் 42 ரன், சாமர்வில்லி 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் யாசிர் ஷா 3, பிலால் ஆசிப் 2, ஹசன் அலி, ஷாகீன் ஷா அப்ரிடி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED போல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா...