நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா : பிரான்ஸ் - ஸ்பெயின் டிரா

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே துடிப்புடன் விளையாடி நெருக்கடி கொடுத்த அர்ஜென்டினா அணிக்கு 23வது நிமிடத்தில் மாஸில்லி அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை கொடுத்தார். இடைவேளைக்குப் பிறகும் ஆதிக்கத்தை தொடர்ந்த அர்ஜென்டினா அணி, நியூசி. கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்தது. இதன் பலனாக 41வது நிமிடத்தில் விலா, 55வது நிமிடத்தில் மார்டினஸ் கோல் அடித்து அசத்தினர்.

பதில் கோல் அடிக்க நியூசிலாந்து வீரர்கள் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. அந்த அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிப்பதுடன் கால் இறுதி வாய்ப்பையும் உறுதி செய்து கொண்டது. முன்னதாக நடந்த மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பிரான்ஸ் சார்பில் கிளமென்ட் 6வது நிமிடத்திலும், ஸ்பெயின் வீரர் இக்லெசியாஸ் 48வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் பெற்றன. இன்று நடைபெறும் பி பிரிவு லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, அயர்லாந்து - சீனா அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED போல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா...