விளையாட்டை நேசிக்கும் நாடு இந்தியா: சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

மும்பை:  இந்தியா விளையாட்டை நேசிக்கும் நாடு என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். மும்பை பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னிலையில் டெண்டுல்கர் கூறியதாவது: ஆரோக்கியமான நாடு என்ற நிலையை எட்ட நமது வாழ்க்கை முறை மாற வேண்டும். இளமையான இந்தியா, தகுதியான இந்தியா என்பதை நான் எப்போதுமே வலியுறுத்தி வருகிறேன். சராசரி வயதை கணக்கிட்டால் நமது நாடு இளமையான நாடு என்றே அழைக்கப்பட வேண்டும். ஆனால் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்தியா தகுதியான நாடு என்று என்னால் நினைக்க முடியவில்லை. சர்க்கரை வியாதியில் இந்தியா உலகில் 3வது இடத்தில் உள்ளது. இந்தியர்களின் உடல் பருமன் என்பது மிகவும் கவலை தரக்கூடிய விஷயம். எனவே நமது லைஃப் ஸ்டைல் மாற வேண்டும்.

விளையாட்டை நேசிக்கும் நாடு இந்தியா என்பது உண்மை. எனவே குழந்தைகளுடன், பெற்றோர்கள் சேர்ந்து தினமும் விளையாட வேண்டும். இதனால் அவர்களுடனான உறவு மேம்படும். பெற்றோர்களின் உடல் நலனுக்கும் நல்லது. இதை கருத்தில் கொண்டு நமது வாழும் முறையை கண்டிப்பாக மாற்ற வேண்டும். என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கான இலக்கை மாணவப் பருவத்திலயே நான் கண்டு கொண்டேன். பின்னர் அதை அடைய இடைவிடாமல் உழைத்தேன். அதே போல் மாணவர்களாகிய நீங்களும் இப்போதே உங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதை துரத்தி ஓடுங்கள். அவ்வாறு செய்தால் ஒருநாள் உங்கள் கனவு நிஜமாகி விடும். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு கிரிக்கெட்தான் எல்லாம். அது எனக்கு நிறைய தந்திருக்கிறது. நிறைய கற்றுத் தந்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற...