டயட்டுலே இது வேற மாதிரி!

நாம் என்னவெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அவை எங்கிருந்து வருகின்றன என்பதை முக்கியமாக கவனியுங்கள்.ஆப்பிள் நியூஸிலாந்தில் இருந்தும், மாதுளை ஆஸ்திரேலியாவில் இருந்தும், ஆரஞ்சு ஸ்பெயினிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.இதுபோல் ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி வரும் உணவுப்பொருட்களையே இன்று பரவலாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதுமே இதுதான் நிலைமை. இதனை மாற்றி, ‘உங்களைச் சுற்றியிருக்கும் 100 மைலுக்குட்பட்டு கிடைக்கும் உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிடுங்கள்’ என்று அறிவுறுத்துகிறது புதிய டயட் ஒன்று. ஆமாம்... இதற்குப் பெயரே 100 மைல் டயட்.

ஃப்ரெஷ்ஷாக இருப்பதாக நினைத்துக் கொண்டு மிகப்பெரிய கடைகளிலிலிருந்து நாம் வாங்கி உண்ணும் காய்கறிகள், பழங்கள் உண்மையில் அன்று விளைந்தவையா... கண்டிப்பாக இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பே பறிக்கப்பட்டு, கெடாமல் இருப்பதற்காக குளிரூட்டப்பட்ட குடோனில் பத்திரப்படுத்தி, அங்கிருந்து பெருநகரங்களுக்கு கொண்டு வந்து, மீண்டும் குளிர்சாதனமுள்ள கடைகளில் வைத்துதான் விற்பனை செய்கிறார்கள். போதாததற்கு அவற்றில் தெளிக்கப்படும் ரசாயனங்கள் வேறு. இதன் விளைவு விதவிதமான நோய்கள்.

இதற்கு தீர்வாகவே கனடா நாட்டு தம்பதிகளான அலிசா ஸ்மித் மற்றும் ஜேம்ஸ் மேக்கின்னன் 100 மைல் டயட்டைப் பரிந்துரைக்கிறார்கள். இவர்கள் மருத்துவத் துறையை சார்ந்தவர்கள் அல்ல என்றாலும், தங்கள் அனுபவத்தில் இருந்து இந்த ஆலோசனையை முன் வைக்கிறார்கள்.

தங்கள் வசிப்பிடத்திலிருந்து 100 மைல் வட்டப்பாதைக்குள் உற்பத்தி செய்யப்படும் உணவுகளை ஒரு வருட காலம் சாப்பிட்டு, அதன்மூலம் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே ‘100-Mile Diet: A Year of Local Eating’ என்னும் புத்தகத்தில் விளக்கியுள்ளனர் இந்த தம்பதிகள்.முக்கியமாக, உங்கள் உடல்நிலைக்கும் நீங்கள் வசிக்கும் சுற்றுப்புறச்சூழலின் தட்பவெப்பநிலைக்கும் ஏற்ற உணவே ஆரோக்கிய உணவு என்கிறார்கள் அலிசா ஸ்மித் மற்றும் ஜேம்ஸ் மேக்கின்னன் தம்பதிகள்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்!

- என்.ஹரிஹரன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: