×

அணைகள் நிரம்பிய போதிலும் ஊட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இம்முறை 4 மாதங்கள் மழை கொட்டி நிலையில், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. எனினும், ஊழியர்கள் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யாத நிலையில் செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாட்டு உருவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் இறுதியில் துவங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து 4 மாதங்கள் கொட்டி தீர்த்தது. மேலும், அவ்வப்போது ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில், கோரிசோலா, கிளன்ராக், ஓல்டு ஊட்டி, தொட்டபெட்டா அப்பர் மற்றும் லோயர், கோடப்பமந்து அப்பர் மற்றும் லோயர், மார்லிமந்து அணை என இம்முறை அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. எந்த அணையிலும் தண்ணீர் இல்லை அல்லது குறைந்து காணப்படுகிறது என கூற முடியாது.

 ஆனால், ஊட்டியிலோ நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் வராத நிலையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டி நகரின் முக்கிய இடங்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஊட்டி நகரின் முக்கிய பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து அணைகளும் நிறைந்து காணப்படும் நிலையில், எதற்காக லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது கேள்வி குறியாக உள்ளது.  

தற்போது லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து, நகராட்சி நிர்வாகமே செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் தேவைக்கேற்ப தண்ணீர் உள்ள போதிலும், தண்ணீர் முறையாக குழாய்கள் மூலம் விநியோகம் செய்யாமல் இருப்பது எதற்கு என்ற கேள்வியும் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் ஊட்டி நகரில் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்காமல், அனைத்து பகுதிகளுக்கும் முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், ஒரு நாள் இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dams,ooty, water
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...