×

கஜா புயலுக்கான உரிய நிதி கிடைக்குமா?: பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதல்வர் பழனிசாமி அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தின் மாப்பிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இருந்தனர். ஆய்வின்போது, புயலால் உயிரிழந்தவர்களின் 6 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் வழங்கினார். இதுதவிர புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழங்கினர்.

இதனையடுத்து தஞ்சைக்கு சென்ற முதல்வர் பழனிசாமி அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டிருந்த நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல முதல்வர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் மோசமான வானிலை காணப்படுகிறது. இதனையடுத்து புயல் சேத ஆய்வை தொடராத முதல்வர் பழனிசாமி மீண்டும் திருச்சிக்கே திரும்பினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கனமழை பெய்த காரணத்தால் திருவாரூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, புயல் சேதம் குறித்து விளக்க உள்ளேன் என்றார்.

இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் முதல்வர் பழனிசாமி, கஜா புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல்வர் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi , Kaja Storm,necessary,funds,CM palanisami,meet,PM Modi,visit,Delhi,today
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...