×

ஹெலிகாப்டர் மூலம் சென்று மக்களை சந்திக்காமல் எடப்பாடி நாடகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நாடகம் நடத்தியிருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: எதிர்க்கட்சிகள் குறைகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டுகிறார். அதுபற்றி உங்கள் கருத்து?
எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டிய முதல்வருக்கு எந்த விளக்கமும் நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. முதலில் மக்கள் சொல்லும் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லட்டும்.

அதற்குப் பிறகு முதல்வருக்கு நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். டெல்டா மாவட்டப் பகுதிகளில் கஜா புயலால் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு பல உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து நொறுங்கி இருக்கிறது. தென்னை மரங்கள், வாழை மரங்கள், பயிர்கள், முழுமையாக நாசமாக்கப்பட்டு இருக்கிறது. அழிந்து போய் இருக்கும் அந்த 8 மாவட்டங்களில் இருக்கும் மக்கள் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, குடிக்க தண்ணீர் இன்றி மிகுந்த கொடுமைகளுக்கு ஆளாகி நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கும் அக்கிரமம், கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முதல்வர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை தவிர்த்து விட்டு சேலத்தில் ஆடம்பரமாக மிகப்பெரிய கொண்டாட்டமாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செல்லாமல் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டார். கடந்த 2 நாட்களாக  முதல்வர் ஏன் செல்லவில்லை என்று ஊடகங்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், 8 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பிய கேள்விக்கு பயந்து 5வது நாளான இன்று எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.

சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சியில் இறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஏறி குறிப்பிட்ட 2, 3  இடங்களுக்கு மாத்திரம் சென்று அதுவும் ஆளும் கட்சிக்காரர்கள், அமைச்சர்கள் புடைசூழ, காவலர்கள் புடை சூழ எங்கு முதல்வர், எங்கு முதல்வர் என்று மக்கள் கேட்கின்ற நேரத்தில் இங்குதான் இருக்கிறார், இங்குதான் இருக்கிறார் என்று போலீஸ்காரர்களும், அதிகாரிகளும் சொல்லும் நிலையில் எங்கே அவர் இருக்கிறார் என்று பார்க்க முடியாத நிலையில் ஆளும் கட்சிக்காரர்களே சூழ்ந்து கொண்டு ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்.

ஏற்கனவே செட்டப் செய்து வைத்திருந்த ஆளும் கட்சிகாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாத்திரம் மீடியா விளம்பரத்திற்காக  கொடுத்து விட்டு மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஏறி திருச்சிக்கு புறப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறார். திருச்சியில் இருந்து சென்னை வர இருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. எனவே எதிர்க்கட்சிகாரர்களை பார்த்து கேள்வி கேட்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நான் கேட்கிற கேள்வி? முதல்வர் பொறுப்பில் இருந்து கொண்டு பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்களை போய் சந்திக்காமல் இதுவரை இருப்பதற்கு என்ன காரணம்? அதற்கு அவர் முதலில் பதில் சொல்லட்டும்.

அரசு அதிகாரிகள் வரவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்ற நிலையில் சேதங்களின் புள்ளி விவரங்களை அரசு வெளியிட்டு நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார்களே? அரசு அதிகாரிகள் மட்டுமல்ல அமைச்சர்களும் அங்கு செல்ல முடியவில்லை, முதல்வரும் போகவில்லை, நிர்வாகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. எந்த முயற்சிகளிலும் இந்த அரசாங்கம் ஈடுபடவில்லை என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு.
 பிரதமர் இதுவரைக்கும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை வந்து பார்க்கவில்லை. உங்கள் எம்.பி.க்கள் பிரதமர் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவார்களா?

நிச்சயமாக வலியுறுத்துவோம். ஏற்கனவே அந்த பகுதியில் இருக்கும் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் எல்லா பகுதிகளுக்கும் சென்று முடிந்தவரை என்னென்ன சம்பவங்கள் நடந்திருக்கிறது. என்னென்ன சேதாரங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கணக்கெடுத்து கொண்டிருக்கிறார்கள். திமுக சார்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க பொருட்களை நாங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் அதை நாங்கள் வழங்க இருக்கிறோம். ஏற்கனவே திமுக சார்பில் 1 கோடி நிவாரண நிதி வழங்க அறிவிப்பு செய்திருக்கிறோம்.

எங்கள் எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தையும் அந்த நிவாரண நிதிக்கு வழங்குவதாக முடிவு செய்து அதுவும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
முதல்வர் மழையை காரணமாகச் சொல்லி 2 இடங்களை மட்டும் பார்த்து விட்டு வந்திருக்கிறார். உங்கள் கருத்து? மழையைக் காரணம் காட்டிய வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இன்று தங்கி மழை விட்டதற்கு பிறகாவது அவர் பார்த்துவிட்டு வந்திருக்க வேண்டும். இது என்னுடைய வாதம். இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crowd ,MK Stalin , Helicopter, people, condemned ,MK Stalin
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...