இன்று மிலாது நபி திருநாள் முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மிலாது நபி திருநாளை முன்னிட்டு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இப்புனித நாளில், உலகில்  அமைதியும், சகோதரத்துவமும் நிறையட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய “மீலாது நபி” நல்வாழ்த்துகள். திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):நபி கள் நாயகம் (ஸல்) பிறந்த நாளான இன்று மக்கள் அனைவரும், மத நல்லிணக்கத்தோடும் சாந்தி, சமாதானம், பொறுமை, அன்பு, மன்னிப்பு, கொடை ஆகிய நற்பண்புகளோடும், வாழ்வில் வளமும், நலமும், உயர்வும், மகிழ்வும் பெற்று வாழ இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீலாது நபி நல்வாழ்த்துக்கள்.

 

ராமதாஸ் (பாமக நிறுவனர்): நபிகளின் போதனையை இங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தவறாமல் கடைபிடிப்பவர்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் அன்புள்ளத்துடன் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.  இந்தச் சகோதரத்துவம் உலகுள்ள வரை தொடர வேண்டும். நபிகள் நாயகம் கற்பித்த  போதனைகளையும் நம் வாழ்வில்  கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

வைகோ(மதிமுக பொது செயலாளர்): பல்வேறு அரும்பெரும் குணங்களின் கொள்கலனாக, கருவூலமாகத் திகழ்ந்த பெருமைக்குரிய அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நன்னாளில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு இனிய வாழ்த்துகள்.  டிடிவி.தினகரன்: போதித்த இறை தூதர் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் இந்நன்னாளில்  இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, நபிகள் நாயகம் போதனைகளை கடைபிடிப்போம், பின்பற்றுவோம்.

அன்புமணி (பாமக இளைஞரணித் தலைவர்): நபிகள் நாயகம் போதித்த பொறுமை,  சகிப்பு தன்மை, சமாதானம், சகோதரத்துவம் போன்றவற்றை கடைபிடித்து, உலகில்  அமைதி, வளம், நல்லிணக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்த அவரது  பிறந்தநாளில் நாம் உறுதியேற்போம்.

பிரசிடென்ட் அபுபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர்):  நபிகள் நாயகம் கோபம், பொறாமை, பேராசை, புறம்பேசுதல் போன்ற குணங்கள் கூடாது என்றார்.

அவரின் இத்தகைய போதனைகள் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கத்தக்க அறிவுரைகளாகும். இந்த போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துகள். இதேபோல, சமக தலைவர் சரத்குமார், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா,  புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: