பாலியல் கொடுமை வழக்குகளில் விசாரணை நடத்துவது பற்றி போலீசாருக்கு பயிற்சி தர வேண்டும்: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2007 அக்டோபர் மாதம் தனது சகோதரியுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வெங்கடேசன் என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஆரணி மகளிர் போலீசில் பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் வெங்கடேசனை கைது செய்து அவர் மீது பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம், வெங்கடேசனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2013 மார்ச் 28ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து வெங்டேசன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு: பாதிக்கப்பட்ட பெண் தனது தங்கையுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது வெங்கடேசன் அத்துமீறி நுழைந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வெங்கடேசன்தான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசிடம் கூறிய பாதிக்கப்பட்ட பெண், டாக்டரிடம் தன்னை பலாத்காரம் செய்தவர் அடையாளம் தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குற்றம்சாட்டப்பட்டவருக்கும் மருத்துவ பரிசோதனை காலதாமதமாக செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது சகோதரியின் வாக்குமூலங்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. இந்த காரணங்களுக்காக இந்த வழக்கிலிருந்து வெங்கடேசன் விடுவிக்கப்படுகிறார். மொத்தத்தில் இந்த வழக்கை எப்படி விசாரணை நடத்துவது என்று விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டருக்கு தெரியவில்லை என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. விசாரணை அதிகாரி சரியில்லாமல் விசாரணை நடத்தியதால்தான் வெங்கடேசன் இந்த வழக்கிலிருந்து விடுதலையாகிறார்.  எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளை எப்படி புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்து விசாரணை அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்க டிஜிபிக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதற்காக இந்த தீர்ப்பு நகலை டிஜிபிக்கு அனுப்புமாறு உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு உத்தரவிடப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: