பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 2.2 டன் குட்கா பறிமுதல்: டிரைவர் உள்பட 3 பேர் கைது

திருவொற்றியூர்: பெங்களூரில் இருந்து சென்னை திருவொற்றியூருக்கு கடத்தி வந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2.2 டன் குட்கா பொருட்களை, 2 லாரிகளுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். சென்னை திருவொற்றியூர் அருகே சடையங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எண்ணூர் உதவி கமிஷனர் தினகரன் தலைமையில், சாத்தாங்காடு போலீசார் நேற்று மதியம் சடையங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு குடோன் வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் இருந்து, மற்றொரு மினி லாரியில் மூட்டைகளை ஏற்றி கொண்டிருப்பதை பார்த்தனா். உடனே போலீசார் லாரியின் அருகில் சென்றனர். போலீசாரை பார்த்ததும், அங்கிருந்த 4 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை, போலீசார் விரட்டி சென்று 3 பேரை மடக்கி பிடித்தனர்.

பின்னர், அந்த லாரியில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் என தெரிந்தது. இதையடுத்து போலீசார், குட்கா பொருட்கள் அடங்கிய மூட்டைகளை, லாரிகளுடன் பறிமுதல் செய்து, பிடிபட்ட 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனா். அதில், சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் குணசேகரன் (45). சுரேஷ் (42), சந்தானம் (38) என தெரிந்தது. மேலும் விசாரணையில், பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திருவொற்றியூர் சடையங்குப்பத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த பொருட்கள் யாருக்கு சப்ளை செய்யப்படுகிறது என்பது தெரியாது என அவர்கள் கூறியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முக்கிய புள்ளியை வலைவீசி தேடி வருகின்றனா்.

500 கிலோ குட்கா சிக்கியது

மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ் (50). இவர் அந்தப் பகுதியில் பல வருடங்களாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஜேசுராஜ் தனது கடை அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே சின்னதாக குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சட்ட விரோதமாக, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை பதுக்கி வைத்து, தொடர்ந்து விற்பனை செய்து வந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மதுரவாயல் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு மாறுவேடத்தில் சென்ற போலீசார், ஜேசுராஜ் மளிகை கடையை மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது, ஜேசுராஜ் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், ஜேசுராஜின் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 500 கிலோ குட்கா போதைப் பொருளை பறிமுதல் செய்து, ஜேசுராஜையும் கைது செய்தனர். இதையடுத்து, போலீசார்,அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: