×

பாரிமுனையில் சாம்பிராணி புகை போடுவதாக மயக்க மருந்து தெளித்து நகை பட்டறை தொழிலாளியிடம் 60 சவரன் அபேஸ்

சென்னை: சாம்பிராணி புகை போடுவதாக கூறி, மயக்க மருந்து தெளித்து நகை பட்டறை தொழிலாளியிடம் 60 சவரனை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர். சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் செரிபில்லா (29). அதே பகுதி எடப்பாளையம் தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு  சாகிப் (45) என்பவர் தொழிலாளியாக வேலை செய்கிறார். நேற்று காலை செரிபில்லா, தனது பட்டறையில் தயாரித்த சுமார் 60 சவரன் நகைகளை, என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள கடையில் கொடுக்கும்படி சாகிப்பிடம் கொடுத்துள்ளார். அதன்படி, அந்த நகையை அவர் எடுத்து கொண்டு, என்எஸ்சி போஸ் சாலையில் நடந்து சென்றபோது, எதிரே வந்த 2 பேர், சாகிப்புக்கு கண் திருஷ்டி அதிகமாக இருப்பதாகவும், அவருக்கு சாம்பிராணி புகை போடுவதாகவும் கூறி அவரது முகத்தில் புகை அடித்துள்ளனர். இதில், அவர் மயங்கிவிட்டார். சிறிது நேரம் கழித்து கண் விழித்தபோது, தனது கையில் இருந்த 60 சவரன் நகை பையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

* பல்லாவரம் அடுத்த கோவிலம்பாக்கம் சத்யா நகர் 9வது தெருவை சேர்ந்த மஞ்சுளா (40), அவரது மகள் சீதா (22), மற்றும் பம்மல், எல்ஐசி காலனியை சேர்ந்த மகாலட்சுமி (40) ஆகியோர் ரேடியல் சாலையில் பைக்கில் சென்றபோது, அவர்களை தாக்கி அவர்களது கழுத்தில் கிடந்த 20 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். படுகாயமடைந்த மகாலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
* வேலை கிடைக்காத விரக்தியில் பம்மல் அண்ணாநகர், எஸ்பிஐ காலனியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (30) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* குடும்ப தகராறு காரணமாக காசிமேடு ஜீவரத்தினம் சாலையை சேர்ந்த ஜெயஸ்ரீ (26) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயயின் பெற்றோர், தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். ஜெயஸ்ரீக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால், ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
* குடும்ப தகராறு காரணமாக ஆதம்பாக்கம் காவேரி தெருவை சேர்ந்த ராஜி (27) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* பரங்கிமலை ரயில்வே ஸ்டேசன் சாலையில் தனியார் டியூஷன் சென்டர் உள்ளது. இங்கு பயிலும் ராணுவ கர்னல் முருகேஸ் என்பவரின் மகன் சச்சனுடைய ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை மர்ம நபர்கள் நேற்று திருடிச் சென்றனர்.
* கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் காரில் சுற்றி வந்த பிராட்வே பகுதியை சேர்ந்த முகமது தாரிக் (21), துஷைல் (21), நூர்முகமது (21) அகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 11 ஆயிரம், கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
* காசி திரையரங்கம் அருகே கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயகுமார் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், கஞ்சா விற்ற மேடவாக்கம், விஜய நகர், காந்தி தெருவை சேர்ந்த மேகநாதன் (30), துர்கா (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
* காதலி இறந்த மனஉளைச்சலால் அவதிப்பட்டு வந்த விருகம்பாக்கம் யாதவ் தெருவை சேர்ந்த திரைப்பட படப்பிடிப்பு ஊழியர் மணி (23) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* அயனாவரம் பகுதியில் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அயனாவரம் ஏகாங்கிபுரம் 4வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜோதி (50), வியாசர்பாடி கணேசபுரத்தை சேர்ந்த குட்டியம்மா (38) உட்பட 11 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
* மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், வள்ளுவர்நகர் 11வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (22). பெயின்டர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் தனது பைக்கில் வேளச்சேரி மெயின் சாலையின் வழியாக வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தபோது லாரி மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
* பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அனகாபுத்தூர், வெங்கடேஸ்வரா நகர், துரைசாமி தெருவை சேர்ந்த ஹரி (46), அனகாபுத்தூர் பக்தவச்சலம் நகரை சேர்ந்த முருகன் (38), சுந்தரமூர்த்தி (44), அனகாபுத்தூர் ஜேஎன் சாலை பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* அம்பத்தூர் பகுதிகளில் பூட்டிய வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்த ம ணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த பாண்டியன் (எ) மாயகிருஷ்ணன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 15 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெண் போலீசிடம் வழிப்பறி
இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு
* ராயப்பேட்டையை சேர்ந்தவர் தேவி புவனேஸ்வரி (39). சென்னை டிஜிபி அலுவலகத்தில் சூப்பரண்டன்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சுரேஷ். காவல் துறையில் அமைச்சுப் பணியாளராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை பொழிச்சலூரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு இருவரும் மொபட்டில் சென்றுவிட்டு, அங்கிருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மீனம்பாக்கம் மேம்பாலத்தில் சென்றோது, மற்றொரு பைக்கில் வந்த இருவர், தேவி கழுத்தில் கிடந்த 9 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
* ஆலந்தூர் எம்.கே.சாலையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் காவலர் பயிற்சி இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் நேற்று திருடுபோனது.

30 சவரன் நகை, பணம் கொள்ளை
எம்ஜிஆர் நகர் ஞானமணி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (48). இவர் அதே பகுதியில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டின் கீழ் தளத்தின் கதவை பூட்டிவிட்டு முதல் தளத்தில் தனது குடும்பத்துடன் தூங்க ெசன்று விட்டார். பிறகு நேற்று காலை ஆனந்தராஜ் எழுந்து வந்து பால் வாங்க செல்ல தனது மணி பர்சை எடுத்துள்ளார். அப்போது மணி பர்சில் வைத்திருந்த ரூ.2000 பணம் மாயமாகி இருந்தது. வீட்டின் கதவை பார்த்த போது கதவின் தாழ்பாள் கழற்றப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சந்தேகமடைந்த ஆனந்தராஜ் பீரோ சாவியை எடுத்து திறந்து பார்த்த போது 30 சவரன் நகை மாயமாகி இருந்தது. விசாரணையில், வீட்டின் கதவில் உள்ள தாழ்பாளை மர்ம நபர் ஸ்குரு டிரைவர் மூலம் கழற்றி வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewelry workshop worker , jewellery, workshop,
× RELATED பாரிமுனையில் சாம்பிராணி புகை...