×

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற எடப்பாடி பயணம் பாதியில் ரத்து: 2 இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கினார்

திருச்சி: கஜா புயல் பாதித்த பகுதிகளை நேற்று பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம், மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2 இடங்களில் மட்டும் அவர் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அவரிடம் நேரில் முறையிட அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.  கஜா புயலால் நாைக, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு மேலாகியும் நிவாரண உதவிகள் கிடைக்காததால் பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வந்த அமைச்சர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அமைச்சர்கள் ஓட்டம் பிடித்தனர். டெல்டா மாவட்டங்களில் ஹெலிகாப்டரில் சென்று சேத பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானத்தில் நேற்று காலை 7.10 மணிக்கு திருச்சி வந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் அவருடன் வந்தனர்.

 பின்னர் 8.10 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 8.35 மணிக்கு புதுகை ஆயுதப்படை மைதானத்தில் இறங்கினார். அங்கிருந்து காரில் மாப்பிள்ளையார்குளம் என்ற இடத்துக்கு முதல்வர் பழனிசாமி சென்று, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் வழங்கினார். 30 பேருக்கு தலா 10 ஆயிரம் மற்றும் வேட்டி, வேலை, அரிசி ஆகியவற்றையும் வழங்கி ஆறுதல் கூறினார். இதன்பின், சேதமான பகுதிகளை பார்வையிட்டார். ஆனால் பொதுமக்களை சந்திக்கவில்லை. குறைகளை கூற தயாராக இருந்த மக்களை முதல்வர் அருகிலேயே செல்ல விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

 இதைத்தொடர்ந்து ஆயுதப்படை மைதானம் வந்து ஹெலிகாப்டரில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகம் சென்றார். அங்கிருந்து காரில் பட்டுக்கோட்டை பைபாஸ் சூரப்பள்ளம் என்ற கிராமத்திற்கு சென்றார். அந்த பகுதியில் சாய்ந்திருந்த தென்னந்தோப்புக்குள் சென்று பார்வையிட்டார். இதன்பின், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். அங்கிருந்து திருவாரூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.இதற்காக திருவாரூர் திரு.வி.க.கல்லூரி மற்றும் வா.சொ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் வந்த ஹெலிகாப்டர் 11.25 மணிக்கு திருவாரூர் வந்தது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்ததால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து வானில் 2 முறை வட்டமடித்தது. மழையினால், நாகை மற்றும் திருவாரூரில் இறங்கமுடியாத நிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு பகல் 12 மணிக்கு வந்தடைந்தது. இதையடுத்து முதல்வர், விமான நிலைய ஓய்வறையில் சிறிது நேரம் தங்கி இருந்தார்.
 மீண்டும் திருவாரூர், நாகை செல்வது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசித்த போது, வானிலை சரியில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து மன்னார்புரம் சுற்றுலா மாளிகை சென்றார்.

அங்கு அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திவிட்டு மாலை 3 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார். ஹெலிகாப்டரில் சென்று சில பகுதிகளை மட்டும் பார்வையிட்டு விட்டு பாதியிலேயே பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியதால் புயலில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் வேதனையை குமுறலுடன் வெளிப்படுத்தினர்.

முதல்வர் வருகை: விவசாயி கைது
பட்டுக்கோட்ைட: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் சங்க தலைவர், பொன்னவராயன்கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவரும், தென்னை விவசாயியுமான வீரசேனன் நேற்று முன்தினம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பட்டுக்கோட்டைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அப்போது முதல்வருக்கு எதிராக வீரசேனன் போராட்டம் நடத்தி விடுவார் என்று போலீசார் கருதினர். இதனால் மணிக்கூண்டு பகுதியில் டீக்குடித்து கொண்டிருந்த அவரை கடையில் வைத்தே போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். முதல்வர் சென்றபின்னர் தான் அவரை விடுவித்தனர்.

பதில் அளிப்பதற்கு நேரமில்லை
பட்டுக்கோட்டையில் 2 ஏக்கர் தென்னந்தோப்பில்  தென்னைகள் அடியோடு சாய்ந்து கிடந்தது. இதை கண்டதும் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி நடந்து சென்று தென்னை மரங்களை பார்வையிட்டார். 25 நிமிடம் நடந்த  இந்நிகழ்ச்சியின் இறுதியில் முதல்வர் பழனிசாமி புறப்பட தயாரானபோது  எதிரில் நின்றிருந்த நிருபர்கள் கேள்வி  கேட்டனர். அதற்கு பழனிசாமி, கையில் கட்டியிருந்த கடிகாரத்தை காட்டி மணி ஆகிவிட்டது என்று  கூறியபடியே காரில் ஏறி சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Eduardi ,storm ,areas , Gajah Storm, Nayaka, Thiruvarur, Thanjavur, Trichy, Pudukottai, Dindigul, Cuddalore, Edattadi
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...