×

அரசின் நிவாரண உதவி மக்கள் கண்ணீரை துடைக்காது : ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: கஜா புயலால் காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், சேதங்களும் வரலாறு காணாதவை. இந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்ப்பது ஆதரவையும், ஆறுதலையும்தான். ‘பாதிக்கப்பட்ட உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்’ என்று கூறி அவர்கள் மனதில் நம்பிக்கையை மட்டும் விதைத்து விட்டால், அது கொடுக்கும் தைரியத்தில் இழந்தவற்றை மறு உருவாக்கம் செய்யும் பணிகளில் அவர்கள் முழுவீச்சில் இறங்கியிருப்பார்கள். புயலால் ஏற்படும் பாதிப்புகள் சரி செய்யப்படும் என்று கூறியிருக்க வேண்டிய அமைச்சர்கள், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியதால்தான் அவர்கள் மீது மக்களின் கோபம் திரும்பியது. மக்கள் கோபத்துடன் போராட்டம் நடத்தும் இடங்களில் அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய அமைச்சர்கள் தங்களின் அதிகாரத் தோரணையை காட்டியதுதான் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில் பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறார். இது மக்கள் கோபத்தை தணிக்கவில்லை; மாறாக மக்களின் கோபத்தை அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, அதாவது ஏக்கருக்கு ரூ.5400 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது சேதமடைந்த பயிர்களை அகற்றி நிலத்தை சீரமைப்பதற்குக் கூட போதாது. ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும் போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த அரசு, இப்போது அதில் கிட்டத்தட்ட நூற்றில் ஒரு பங்கு மட்டுமே இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? தென்னை மரங்களில் ஒருமுறை தேங்காய் பறித்தாலே இதைவிட அதிக வருமானம் கிடைக்கும் எனும் நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி யானைப்பசிக்கு சோளப்பொரியாகவே அமையும். இது போதுமானதல்ல. சேதமடைந்த குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. இது மக்களின் கண்ணீரைத் துடைக்காது. துயரங்களைப் போக்காது. மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ற வகையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,Ramadoss , Government's relief aid , wipe out tears, Ramadoss condemned
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...