×

சமூக நீதி நிலைநாட்ட நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளில் ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதி ஏற்போம் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை : சமூக நீதி நிலைநாட்டப்படுவதற்காக நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளில் ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதி ஏற்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக, திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்த சாதி அடக்கு ஒடுக்குமுறைகளை ஒரு நூற்றாண்டு காலத்தில் அப்படியே புரட்டிப் போட்டு, சமூக நீதியை நிலைநாட்டிய திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் இன்று. சர்.பிட்டி.தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், பனகல் அரசர் என நீதிக் கட்சி முன்னோடிகளை நம் முன்னோர்களை நினைவு கூர்வதற்கான நாள்.
 ஆங்கிலேயர் ஆட்சியில் மிகக் குறைந்த அதிகாரங்கள் மட்டுமே கொண்ட இரட்டை ஆட்சி முறையில், சமூக சீர்திருத்தத்திற்கான இத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது நீதிக்கட்சி எனும் திராவிட அரசியல் இயக்கம். அதன் தொடர்சியாகத்தான் திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் சமூக நீதிக் கொள்கையால் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.

பெருமையுடன் இதனை நினைவில் ஏந்த வேண்டிய இந்நாளில், தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் மனதுக்கு இதம் தருவதாக இல்லை; மாறாக இடர் நிறைந்ததாகவே இருக்கிறது.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகேயுள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த இளைஞர் நந்தீஷ் இளம்பெண் சுவாதி ஆகிய இருவரும் சட்டப்படியான திருமண வயதை எட்டிய நிலையில், சாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலைப்படாமல் மனதால் ஒன்று கலந்து, திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் கடத்தப் பட்டு, சித்ரவதைகளுக்குள்ளாகி, கைகள்  கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் பகுதியில் காவிரி ஆற்று நீரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள செய்தி, தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. பெற்று வளர்த்து தாலாட்டி சீராட்டி பாசம் பொழிந்து அதே பாசத்தை தன் மீதும் காட்டிய மகளை, தானே முன்னின்று கொலை செய்கிற கொடுமை நடக்கிறதென்றால், இந்த மண்ணில் மனித உறவுகளைவிட, மனிதாபிமான உணர்வைவிட, பாழாய்ப் போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா என்ற வேதனை மிகுந்த கேள்வி எழுகிறது.

எந்தப் பெற்றோரும் தன் மகள் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்றுதான் விரும்புவர். இளம்பெண் சுவாதி தன் மீது அன்புகொண்ட துணையாக இளைஞன் நந்தீஷை விரும்பித் திருமணம் செய்த நிலையில், பெற்றோருக்கு அதில் மனமாச்சரியங்கள் இருந்தால் அது குறித்துப் பேசித்  தீர்வு கண்டிருக்கலாம். சட்டம் தந்துள்ள வழிகளின்படி செயல்பட்டிருக்கலாம். ஆனால், சட்டத்தை மீறி, சாதி ஆணவத்துடன் பெற்ற மகளையும் அவரது கணவரையும் தீர்த்துக்கட்டுவது என்பது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம். அண்மைக்காலமாக இத்தகைய கொடூரக் குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடப்பது பெரும் துன்பத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. 2016ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் வழங்கிய தீர்ப்பில், தமிழ்நாட்டில் 47 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி வேதனையை வெளிப்படுத்தியதுடன்,  அவற்றைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் எடுத்துரைத்துள்ளார். எனினும், ஆட்சியில் இருப்பவர்கள் இதன் மீது கவனம் செலுத்தாதது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் இத்தகைய சாதி வெறிக் கொலைகள் நடப்ப தில்லை என்று முழுப் பூசணிக்காயை  இலைச்சோற்றில் மறைக்கும் வகையில் அறிக்கைகளும் பேட்டிகளும் தருவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் சாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர் நிகழ்வாகி வருகிறது.

நல்லிணக்கம் நிலவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதிவெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவும் கூடாது. இந்த  மண், அறிவால் பண்படுத்தப்பட்ட மண். இங்கே அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சாதிவெறி தலைவிரித்தாடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.  இந்தியாவில் வேறெங்கும் ஏற்படாத சமுதாய மறுமலர்ச்சி தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தினால் ஏற்பட்டது. அந்த புரட்சிகர மாற்றத்திற்கு இத்தகைய சாதி ஆணவக் கொலைகள் மூலமாக சவால் விடுக்கப்படுகிறது. உயர் சாதிக் கொடுமை திமுக இத்தகைய சாதி வெறிப் படுகொலைகளைக் கண்டிப்பதில்லை என்றும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது என்றும் சிலர் தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் திமுக ஆதரிக்காது. சாதி பாகுபாடற்ற சமுதாயம் அமையவும், மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி தழைக்கவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம் திமுக. சாதிபேதமற்ற அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் விரும்பும் தமிழ்நட்டின் பெரும்பான்மை மக்களின் பேராதரவுடன் திமுக தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கும் என்று உறுதியாகச் சொல்வேன். அடுத்து வரும் தேர்தலில் திமுக ஆட்சியமைக்கும் போது, சாதிவெறிக் கொலைகளைத் தடுக்கவும் அத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்கவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியினையும் திமுக தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற முறையிலும் வழங்குகிறேன்.

திமுக இணையதளம்

திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான திமுக இணையதளத்தை dmk.in அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் பிடிஆர் பி.தியாகராஜன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் மோகன், நெல்லை சுப்பு, சி.எச்.சேகர் கலந்து கொண்டனர். திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளமாய் இப்பக்கம் இனிமேல் செயல்படும் எனவும், இதனை வடிவமைத்த ஐ.டி அணிக்கு பாராட்டுதல், வருங்கால வரலாறு என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Justice Party ,MK Stalin , Justice Party initiated ,establish social justice,MK Stalin's statement
× RELATED ஏ.சி.சண்முகம் விரட்டியடிப்பு