×

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மூச்சு திணறலுக்கு பொருத்திய மாஸ்க் பாட்டில் வெடித்த அதிர்ச்சியில் பெண் பலி

கும்பகோணம்: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மூச்சு திணறல் ஏற்பட்ட பெண்ணுக்கு  பொருத்திய சிலிண்டர் மாஸ்க் பாட்டில் வெடித்து பெண் பலியானார். இதனால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை டி.மாங்குடியை சேர்ந்தவர் ஞானசேகரன். டிரைவரான இவருக்கு தாமரைசெல்வி (35) என்ற மனைவியும், சுரேந்தர் (12), வெங்கடேசன் (7) ஆகிய மகன்களும் உள்ளனர். கடந்த 19ம் தேதி தாமரைசெல்விக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தாமரைசெல்வியை சேர்த்தனர். நேற்று மதியம் திடீரென அதிகளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சிலிண்டரை கொண்டு மாஸ்க் பொருத்தப்பட்டது.  அப்போது மாஸ்க் பாட்டில் திடீரென வெடித்தது. இதன் அதிர்ச்சியில் தாமரைசெல்வி இறந்தார். பாட்டில் வெடித்த சத்தத்தை கேட்டு வார்டில் இருந்த நோயாளிகள், உறவினர்கள், செவிலியர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி, தாமரைசெல்வியின் கணவர் ஞானசேகர் கூறுகையில், கடந்த 19ம் தேதி காய்ச்சல் அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தாமரைசெல்வியை அனுமதித்தோம். நேற்று மதியம் தாமரைசெல்விக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் செவிலியரிடம் கூறினோம். அதற்கு அவர், மருத்துவ பெண் பணியாளரிடம் சிலிண்டர் குழாய் மூலம் மாஸ்க் பொருத்துமாறு கூறினார். அவர், சிலிண்டரில் இருந்து குழாய் மூலம் மாஸ்க்கை பொருத்தும்போது அதில் இருந்த மருந்து வைக்கும் சிறிய பாட்டில் திடீரென வெடித்தது. அப்போது தாமரைசெல்விக்கு சிலிண்டரின் காஸ் உள்ளே சென்றதாலும், பாட்டில் வெடித்ததாலும் அதிர்ச்சியில் இறந்துவிட்டார். இதுகுறித்து செவிலியர்களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காததால் அவர்களை முற்றுகையிட்டோம்’ என்றார்.

இதுகுறித்து அரசு மருத்துவ நிலைய அதிகாரி பிரபாகரன் கூறுகையில், சிலிண்டரில்  இருந்து செல்லும் குழாயில் மாஸ்க் பொருத்தி அதன் பிளாஸ்டிக் பாட்டில் வைத்து மூச்சு திணறலுக்கு சிகிச்சை அளிக்கப்படும். செவிலியர்கள், மாஸ்க் பாட்டிலின் ஸ்கூருவை சரியாக பொருத்தாததால் கீழே விழுந்தது. இதில் ஏற்பட்ட சத்தத்தை வெடித்ததாக கூறுகின்றனர். சளி, மூச்சுத்திணறலால் தாமரைசெல்வி இறந்தார். மாஸ்க் பாட்டில் உடைந்ததற்கும், தாமரைசெல்வி இறந்ததற்கும் சம்பந்தமில்லை’ என்று விளக்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hospital ,Kumbakonam Government , In Kumbakonam Government hospital, a woman was killed , mask bottle blast
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...