×

முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை : பிற்பகல் 1.20க்கு தொடங்குகிறது

பிரிஸ்பேன்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி, பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.20க்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த கேப்டன் விராத் கோஹ்லி களமிறங்குவது இந்திய அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து தொடர்ச்சியாக 7 டி20 தொடர்களில் வெற்றியை வசப்படுத்தி உள்ள இந்திய அணி ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது. 2017 ஜூலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் தோற்ற இந்திய அணி, அதன் பிறகு விளையாடிய அனைத்து தொடர்களிலும் வென்றுள்ளதால் வீரர்களின் தன்னம்பிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியா சென்று விளையாடிய டி20 தொடரிலும் இந்தியா 3-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியதால் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது, ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விளையாடிய எந்த டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெறமுடியவில்லை.
இங்கிலாந்துக்கு எதிராக 0-1 என்ற கணக்கில் தோற்ற ஆஸி. அணி, ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் பைனலில் பாகிஸ்தானிடம் மண்ணைக் கவ்வியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் பாகிஸ்தானுடன் நடந்த இருதரப்பு தொடரிலும் 0-3 என படுதோல்வி அடைந்தது. சமீபத்தில் தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த டி20 போட்டியிலும் வெற்றி வாய்ப்பை இழந்த அந்த அணி, முழு பலத்துடன் களமிறங்கும் இந்திய அணிக்கு ஈடு கொடுப்பது சந்தேகமே. எனினும், சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். சூப்பர் பார்மில் இருக்கும் விராத் கோஹ்லியை கட்டுப்படுத்துவதே அவர்கள் எதிர்கொள்ளும் முதல் சவால் என்பதில் சந்தேகமில்லை. கோஹ்லிக்கு எதிராக வார்த்தைப் போரில் இறங்க வேண்டாம் என்று தென் ஆப்ரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி எச்சரித்துள்ளதை ஆஸி. வீரர்கள் கவனத்தில் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மிகுந்த நம்பிக்கையுடன் உள்ள இந்திய அணி நிர்வாகம், முதல் போட்டிக்கான 12 வீரர்கள் அடங்கிய அணியை நேற்று அறிவித்துவிட்டது.

புவனேஷ்வர், பூம்ரா, கலீல் வேகக் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில்... ஆல் ரவுண்டர் குருணல் பாண்டியா, மணிக்கட்டு ஸ்பின்னர்கள் குல்தீப், சாஹல் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைப்பது சிரமமே. ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறி தான்.  இரு அணிகளுமே வெற்றியுடன் தொடரை தொடங்கும் முனைப்பில் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, கலீல் அகமது, ஜஸ்பிரித் பூம்ரா, யஜ்வேந்திர சாஹல், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், குருணல் பாண்டியா, ரிஷப் பன்ட், லோகேஷ் ராகுல் (வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே).
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் ஏகார், ஜேசன் பெஹரண்டார்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கோல்டர்நைல், கிறிஸ் லின், பென் மெக்டெர்மாட், கிளென் மேக்ஸ்வெல், டார்சி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸம்பா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : T20 ,starts ,tournament ,India ,Australia ,Season Test , India name playing XI ,1st T20, I vs Australia, Rishabh Pant ,ickets
× RELATED சில்லி பாய்ன்ட்…