×

ஜீ பூம்பா என்றால் மின் கம்பங்களை நட்டு விட முடியாது: திருச்சியில் முதல்வர் பழனிசாமி பேட்டி

திருச்சி: ஜீ பூம்பா என மந்திரம் கூறி சீரமைப்பு பணிகளை நடத்த முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதல்வர் பழனிசாமி அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தின் மாப்பிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இருந்தனர். ஆய்வின்போது, புயலால் உயிரிழந்தவர்களின் 6 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் வழங்கினார். இதுதவிர புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழங்கினர்.

இதனையடுத்து தஞ்சைக்கு சென்ற முதல்வர் பழனிசாமி அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டிருந்த நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல முதல்வர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் மோசமான வானிலை காணப்படுகிறது. இதனையடுத்து புயல் சேத ஆய்வை தொடராத முதல்வர் பழனிசாமி மீண்டும் திருச்சிக்கே திரும்பினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கனமழை பெய்த காரணத்தால் திருவாரூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட மக்களை வேறொரு நாளில் சந்திக்க உள்ளேன் என்றும் நாளை மறுதினம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, புயல் சேதம் குறித்து விளக்க உள்ளேன் என்றார். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என்பதால், சேதம் கணக்கிடும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் முடியவில்லை என்றும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை துல்லியமாக கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்போம் என்றார். கஜா புயலால் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன என்றும் உயிரை பணயம் வைத்து மின் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  ஜீ பூம்பா என்றால் மின் கம்பங்களை நட்டு விட முடியாது. ஒரு மின் கம்பத்தை நட 14 ஊழியர்கள் தேவை என்றும் ஜீபூம்பா என மந்திரம் கூறி சீரமைப்பு பணிகளை நடத்த முடியாது  என கூறினார். வெளிமாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடைபெறுகிறது என்றும் கஜா புயலால் சேதமடைந்த விவரத்தை உயர் அதிகாரிகள் கணக்கிட்டு வருகிறார்கள் என்றும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ji Bhumba ,Chief Minister ,Srikanthi ,Trichy ,Tamil Nadu , Ji Bhumba, Power Pills, Trichy, Chief Minister Palaniasamy
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...