வங்கக்கடலில் புயல் சின்னம் எதிரொலி இன்று முதல் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல் தற்போது அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதன் தாக்கமாக தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று குன்னூரில் 70 மிமீ, மேட்டுப்பாளையம் 60மிமீ, பவானி 40மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி வங்கக்கடலில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவானது. அது மெல்ல மெல்ல வலுப்பெற்று தற்போது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து  வருகிறது. நேற்றைய நிலவரப்படி அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு தென்கிழக்கு பகுதியிலும், இலங்கைக்கு வடமேற்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும் என்பதால் டெல்டா பகுதியில் இருந்து சென்னை வரை மழை பெய்யும். நாளை, இந்த காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் சென்னை கடலோரப் பகுதிக்கு வரும். அதனாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும். தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இதுவரை மழையை காணாத சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். இந்த சூழ்நிலை 28ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்புள்ளது. அப்போது வட தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்யும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: