கஜா புயல் புரட்டி போட்ட டெல்டாவையே அரசு கவனிக்கல எங்க நெலமை என்னாகுமோ...?: கொடைக்கானல் மலை கிராமத்தினர் குமுறல்

கொடைக்கானல்: கனரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கொடைக்கானல் பகுதியில் உள்ள 50 மலைக்கிராம மக்கள் தவிக்கின்றனர். கஜாவால் முற்றிலும் பாதிக்கப்பட்ட டெல்டாவையே அரசு கவனிக்கலையே எங்க நிலை என்ன ஆகுமோ என்று கிராமத்தினர் குமுறலுடன் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மலைச்சாலைகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், 200 மின்கம்பங்கள், 6 டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்தன. இதனால், கீழ்மலை, மேல்மலையில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 4வது நாளாக நேற்றும் மின்தடை தொடர்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கொடைக்கானல், பெருமாள்மலை அடுத்த குருசடி பகுதியில் நேற்று முன்தினம் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால், சாலை 70 சதவீதம் சேதமடைந்துள்ளது. இதனால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பழநி மலைச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை உள்ளதால், பால், அரிசி, பருப்பு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கொடைக்கானலில் விளைந்த காய்கறிகள், பழங்களை, வெளியூர்களுக்கு லாரியில் எடுத்து செல்ல முடியவில்லை. இதுபோல் கொடைக்கானல் வந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் போதிய பஸ் வசதி இன்றி திண்டாடி வருகின்றனர். வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘‘கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலையில் புயலால் வீடு சேதமடைந்தவர்கள் 3 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 2 முகாம்களில் இருந்தவர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். தற்போது 55 ஆதிவாசி மக்கள் மட்டும் தங்கியுள்ளனர். சேதமடைந்த ஒரு வீட்டிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்’’ என்றனர். இது பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. “கஜா புயலில் முற்றிலும் நாசமாகிப்போன டெல்டாவையே அரசு கவனிக்கலையே, எங்க நிலை என்ன ஆகுமோ?” என்று கிராம மக்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: