×

சொன்னதை செய்தாரா உங்கள் எம்.பி?

இசையோடு சேராத பாட்டு - இன்பமில்லை. பகுத்தறிவு இல்லாத பார்வை-பயனில்லை. சொல் ஒன்று; செயல் வேறு- இது, நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு. இதில், உங்கள் தொகுதி எம்பி. எப்படி? 2014 தேர்தலில் சொன்னதை செய்தாரா? தொகுதியை கவனித்தாரா? வளமாக்கினாரா?அல்லது தன்னை வளமாக்கினாரா? இதை பற்றி அலசுவதுதான் இந்த பகுதி. காரணம், மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே பாக்கி. அதில், உங்கள் தொகுதியின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கப் போகும் சக்தி நீங்கள்தான். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!’ இனி, முடிவு உங்கள் கையில்!

விருதுநகர் தொகுதி எம்பி ராதாகிருஷ்ணன். அதிமுக.வை சேர்ந்தவர். முதல்முறையாக எம்பி ஆனவர். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி மற்றும் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் என 6 சட்டப் பேரவை தொகுதிகளைக் கொண்டதுதான் விருதுநகர் மக்களவை தொகுதி. இங்கு, 2014 தேர்தலில் இவர் கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் உருப்படியாக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதி முழுவதும் பரவலாக உள்ளது. ராதாவின் நாலரை ஆண்டு செயல்பாட்டில் விருதுநகர் எம்பி தொகுதி கண்ட வளர்ச்சிதான் என்ன? பார்ப்போம் விரிவாக...

எந்த தொகுதி எம்பி?
ராதாகிருஷ்ணன் தனது தொகுதியில் ‘நல்ல’ அறிமுகத்தோடு இருக்கிறார். ‘எங்க தொகுதி  எம்பி.யா? எங்கேயா இருக்காரு?’ என மக்கள் கிண்டலாக கேட்கின்றனர். இவருடைய சொந்த ஊர் சிவகாசி. அதனால், சிவகாசியை விட்டு வேற எங்கேயும் எட்டிக்கூட பார்க்க மாட்டாராம்... தொகுதியிலயும் சரி.. வீட்லயும் சரி.. இவருக்கு அலுவலகமே கிடையாது. கட்சிக் கூட்டம், பொதுக்கூட்டம், ஆய்வுக் கூட்டங்களில் கலந்துக்குவாரு... ஆனால், மைக்கை பார்த்தால் கமுக்கம் ஆகிடுவாரு.... அப்படி ஒரு ஜாக்கிரதை. ேபசினால்தானே வம்பு என பேசுவதை தவிர்த்து விடுவாராம்.

நகமும் சதையும்
இவர் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தபோது, தனக்கு உதவியாக இருந்த ராஜேந்திர பாலாஜியை எம்எல்ஏ.வாக்கி, அமைச்சராக்கி அழகு பார்த்தார். அதற்கு நன்றிக் கடனாக ஜெயலலிதாவிடம் பேசி, இவருக்கு எம்பி சீட் வாங்கி கொடுத்தாராம்் பாலாஜி. சிவகாசியில் இருந்தால் இருவரையும் பிரித்து பார்க்க முடியாது. ஒண்ணாவே வலம் வருவார்கள். அப்படி ஒரு ஒற்றுமை.

சாதிக்காத சாதனை
எம்பி வேட்பாளராக ராதா அறிவிக்கப்பட்டபோது, சிவகாசி ஒன்றிய 8வது வார்டு உறுப்பினர், ஒன்றிய தலைவர், சிட்கோ நிர்வாகி, சிட்கோ தலைவர், காமராஜர் பல்கலைக் கழக செனட் உறுப்பினர் என 5 பதவிகளில் இருந்தார். அவற்றை எல்லாம் ராஜினாமா செய்துவிட்டு எம்பி தேர்தலில் களமிறங்கினார். 5 பதவிகளை விட்டுக் கொடுத்து, எம்பி பதவியில் அமர்ந்தாலும் இதுவரை பெரிதாக எதுவும் சாதிக்காததே இவரின் மிகப்பெரிய சாதனை.

முடியாத பணிகள்
தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 கோடியில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி தொகுதிகளுக்கு ரூ.17.56 கோடியும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ரூ.7.44 கோடியும் செலவு செ்ய்துள்ளாராம். விருதுநகர் மாவட்ட 4 தொகுதிகளில் பரிந்துரைக்கப்பட்ட 248 பணிகளில் 172 மட்டுமே் முடிந்துள்ளன. மதுரை மாவட்ட 2 தொகுதிகளில் பாதிக்குமேல் முடிக்கப்படவில்லை.

ஓம் ஜோதிடாய நமஹ
எம்பி ராதா.வுக்கு ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை. காக்கைக்கு சோறு போடுவதாக இருந்தாலும், ‘ஜோதிடரே போடலாமா?’ என கேட்டுதான் செய்வார். ‘எம்பி எலெக்‌ஷன்ல ஜெயம் நோக்குதான்... போய் கலக்குங்கோ’ என்ற ஜோதிடரின் வார்த்தை அப்படியே பலித்தது. அந்த குஷியில், அவரை வீட்டுக்கு அழைத்து தடல்புடல் விருந்து வைத்தாராம் ராதா. ‘சொன்ன ஜோதிடனுக்கு விருந்து; உழைச்ச எங்களுக்கு அல்வாவா?’ என குமுறுகிறது ரத்தத்தின் ரத்தம்.

அய்த்தலடிக்க ஜிம்ப்பா...
அதிமுக.வை ஓபிஎஸ் உடைத்தபோது டிடிவி.தினகரனிடம் ஒட்டிக்கொண்ட ‘விசுவாசி எம்பி.’க்களில் ராதாகிருஷ்ணனும் ஒருவர். அதன் பிறகு, இபிஎஸ்.சின் கோட்டை எஃகு கோட்டையானதும், பட்டென்று அவரிடம் தாவிவிட்டார். - நல்ல விசுவாசி

தொகுதியில் ஆப்சென்ட் டெல்லியில் பிரசென்ட்
* தொகுதி பக்கமே வராமல் ‘ஆப்சென்ட்’ ஆனாலும், நாடாளுமன்றத்தில் நல்லாவே ‘உள்ளேன் ஐயா’ ஆகியிருக்காரு...!
* மக்களவையில் இதுவரை நடந்துள்ள அமர்வுகள் 15.
* 24.7.14 முதல் 1.8.18 வரை ராதாவின் வருகை பதிவு 74%.
* பட்டாசு, தீப்பெட்டி, ஜிஎஸ்டி, சீனப் பட்டாசு, தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட 15 விவாதங்களில் பங்கேற்றுள்ளார்
* நாலரை ஆண்டில் 816 கேள்வி–்கள் கேட்டுள்ளார்..

‘‘எய்ம்சே என்னாலதான் வந்துச்சு...’’

வாக்குறுதிகளை நிறைவேற்றியது பற்றி ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:


* உங்களை தொகுதியில் பார்க்கவே முடியவில்லை என்று மக்கள் ெசால்கிறார்களே?
அதெல்லாம் சுத்த பொய். அரசு, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொள்கிறேன்.

* தொகுதிக்கு நீங்கள் செய்தது என்ன?
நகரங்களில் மட்டுமே அமைக்கப்படும் ‘ஹைமாஸ்’ மின்கோபுர விளக்குகளை கிராமங்களில் அமைத்துள்ளேன். தாம்பரம்-கொல்லம் எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ், பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு புதிய பெட்டிகளை இணைத்தது உட்பட ரயில்வே சார்ந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் கட்ட உதவினேன்.

* தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக குரல் கொடுத்தீர்களா?
நாடாளுமன்றத்தில் எனது குரல் உரக்க ஒலித்ததால்தான் எய்ம்ஸ் மருத்துவமனை நமக்கு கிடைத்துள்ளது. சீனப்பட்டாசை தடை செய்யவும் பேசினேன். பட்டாசுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி.யை மத்திய அமைச்சரிடம் முறையிட்டு 18 சதவீதமாக குறைத்தேன். அதேபோல், தீப்பெட்டி தொழிலைக் காக்க 18 சதவீத ஜிஎஸ்டி.யை 5 சதவீதமாக குறைக்கும்படி கோரியுள்ளேன்.

மூன்று அவதாரம்
தற்போதைய விருதுநகர் மக்களவை தொகுதி இதுவரை 3 அவதாரங்களை எடுத்துள்ளது. 2008 தொகுதி சீரமைப்புக்குப் முன்பு வரை இது சிவகாசி தொகுதியாக இருந்தது. அதற்கு முன்பு வரை சிவகாசி தொகுதியும் ராமநாதபுரம் மக்களவை தொகுதியாக இருந்தது.

நான் கேஸ் போட்டு என்ன ஆக போகுது?
‘தொகுதியின் எம்பி என்ற முறையில், உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு ஆலைகளுக்கு ஆதரவாக நீங்களும் ஒரு வழக்கு தொடர்ந்து இருக்கலாமே?’ என்ற கேள்விக்கு, ‘‘ஏற்கனவே நிறைய வழக்கு அங்க இருக்கு... நான் புதுசா போட்டு என்னத்த ஆகப் போகுது?’’ என்று பதிலளித்தார் ராதா.

பாழாய் போகும் பட்டாசு பூமி
‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகி–்ன்றனர். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி, நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என 3 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 23ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், ‘இந்தியா முழுவதும் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடையில்லை. ஆனால், இந்த ஆண்டு முதல் பசுமை பட்டாசு மட்டும் தயாரிக்க வேண்டும், சரவெடிகளை வெடிக்கக் கூடாது. பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) மூலப்பொருளை பயன்படுத்தக் கூடாது. தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்’ என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நேரக் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. 40 சதவீத பட்டாசுகள் விற்பனை ஆகாமல் தேக்கமாகின. ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் கூட்டம் கூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த 13ம் தேதி முதல் ஆலைகளை மூடி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவில்லை. தமிழக தொழில் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆண்டுதோறும் 5 ஆயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடக்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க எம்பி ராதாகிருஷ்ணனும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். இது தொடர்பாக எம்பி.யிடம் பலமுறை முறையிட்டும், பட்டாசு ஆலை பிரச்னையை பிரதமரிடமோ, மத்திய அமைச்சரிடமோ  பேசி தீர்க்கவில்லை என்பதே 8 லட்சம் தொழிலாளர்களின் ஆதங்கமாக உள்ளது.
இது குறித்து ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘சீன பட்டாசை தடை செய்யக்கோரி, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். பட்டாசு ஆலை பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி, பட்டாசுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி.யை 18 சதவீதமாக குறைத்தேன். தீப்பெட்டி தொழிலை காக்க 18 சதவீத ஜிஎஸ்டி.யை 5 சதவீதமாக்க கோரியுள்ளேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MP, Virudhunagar district, MP Radhakrishnan, AIADMK,
× RELATED ரூ.4 கோடி விவகாரம்: நயினார்...