புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் சுணக்கம் தஞ்சை, திருவாரூரில் மக்கள் தொடர் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி: தஞ்சை, திருவாரூரில் கஜா புயலில் பாதித்த மக்கள், நேற்றும் அமைச்சர்களை வழிமறித்து போராட்டம் நடத்தினர். திருத்துறைப்பூண்டியில் நேற்று ஒரே நாளில் 50 இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம். திருத்துறைப்பூண்டி நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப  முடியாமல் இருந்து வருகின்றனர். முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு அரிசி  மட்டும் வழங்கி குடிநீர் மற்றும் மளிகை பொருட்கள் வழங்காததை கண்டித்தும்  அதிகாரிகள் வந்து பார்வையிடாததை கண்டித்தும் கடந்த 2 தினங்களாக ஒன்றிய, நகர  பகுதிகளில் பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போது மின்சாரம் வரும் என்று தெரியவில்லை. இந்நிலையில் வேளுர் பகுதிக்கு வந்த அமைச்சர் காமராஜ், ராஜேந்திரபாலாஜி  ஆகியோரை நேற்று முன்தினம் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.  திருத்துறைப்பூண்டியில்   எந்தபாதிப்பும் இல்லை என்று கூறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியனை கண்டித்து நெடும்பலம் பைபாஸ் அருகில் நேற்று  கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.  24வது வார்டு பகுதிக்கு அதிகாரிகள் வந்து  பார்வையிடாததை கண்டித்து திருத்துறைப்பூண்டி மன்னைசாலை ரயில்வே கேட்  அருகில் நூற்றுக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டனர்.  

அனைத்து கட்சி சார்பில்  திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் நடந்தது. ஆட்டூர்,  திருப்பத்தூர், வேளுர், கொக்கலாடி, பாமணி, அண்ணாநகர் ரயில்வேகேட்,  நெடும்பலம் ரயில்வேகேட், வேதை பைபாஸ் சாலை, தோப்படித்தெரு போன்ற  50 இடங்களில் சாலையில் தடுப்புகளை போட்டு மக்கள் மறியல் செய்தனர்.  கிராம பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. நகர பகுதிகளில்  நேற்று ஒருசில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தது. 4 மணி நேரம் மறியல்: மன்னார்குடி அருகே முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் சேதங்களை பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்தும், குடிநீர், மின்வசதி செய்து தர வலியுறுத்தியும் முக்குளம் சாத்தனூர் கிராமத்தை  சேர்ந்த பெண்கள், பொதுமக்கள்,    விவசாயிகள் மன்னார்குடி களவாய்க்கரை பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் வந்து பேசியும் கேட்காமல், மாவட்ட கலெக்டர் வரும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் போராடியதால், 4 மணி நேரம் மன்னார்குடி தஞ்சாவூர் இடையே போக்குவரத்து முடங்கியது. திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  பங்கேற்றார். அதன்பின் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் பத்மாவதி செல்போனில் தொடர்பு கொண்டு நாளை காலைக்குள் பணிகளை துவக்குவதாக உறுதியளித்தார். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது.

வி.ஏ.ஓக்கள் மீது தாக்குதல்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த காலம் கிராமத்தில் நேற்று காலை கஜா புயல் சேத மதிப்பீடு குறித்து கணக்கெடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் பிருந்தா, செந்தில்குமார், கிராம உதவியாளர் விஜயா ஆகியோர் சென்றனர். அப்போது நிவாரண பணிகளில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக கூறி விஏஓக்களை தடுத்து நிறுத்தி மக்கள் தாக்கினர். இதில் காயமடைந்த விஏஓக்கள் பிருந்தா, செந்தில்குமார், கிராம உதவியாளர் விஜயா ஆகியோர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் பேராவூரணி பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் 25க்கும் மேற்பட்டோர் சேத மதிப்பீடு கணக்கெடுப்பு பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 6 லட்சம் தென்னை சேதம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு பணி குறித்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், பாஸ்கர், கருப்பணன் ஆகியோர் நேற்று  கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். பின்னர் சுகாதார துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதல் கட்ட கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு, முந்திரி, சோளம், நெல் ஆகியவை முழுமையாக சேதமடைந்துள்ளது. 6 லட்சம் தென்னை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 35 ஆயிரம் பலா மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட ஒரு விவசாயி கூட விடுபடாமல் நிவாரணம் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. விவசாயிகள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த ஆம்பலாப்பட்டு, திருமங்கலக்கோட்டை, பாப்பாநாடு, வடசேரி, பேய்கரும்பன்கோட்டை, புலவன்காடு, ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், காவராப்பட்டு, பின்னையூர், திருவோணம் உள்ளிட்ட 100 கிராம பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள், தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்தது. சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களும் நாசமானது. இந்நிலையில் மின்சாரம், குடிநீர் வழங்காததை கண்டித்தும், புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட அமைச்சர்கள், அதிகாரிகள் வராததை கண்டித்தும் ஒரத்தநாடு அடுத்த ஊரணிபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மொபைல் டவர் வந்தும் பயனில்லை

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டதால் அங்கு மொபைல் செல்போன் டவர் வரவழைக்கப்பட்டது. இந்த டவர் வந்து 2 நாட்களாகியும் அதை இயக்க தஞ்சையில் இருந்து டெக்னீசியன்கள் வரவில்லை. இதனால் அந்த மொபைல் டவர் இன்னும் செயல்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிராம்பட்டினம் மக்கள் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டு அல்லல்படுகின்றனர்.

ஓஎன்ஜிசிக்கு முதலில் மின் இணைப்பு; மக்கள் ஆவேசம், மறியல்

திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கடந்த 3 நாட்களாக மின்வசதி கிடைப்பதற்காக அங்கு விழுந்த மரங்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இந்நிலையில் அப்பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் அங்குள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் ஒன்றுக்கு முன்னுரிமை அளித்து மின் இணைப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று மதியம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மின் துறை  உயர் அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின் விநியோகம் கிடைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: