மெரினா காமராஜர் சாலை பகுதியில் கட்டி முடித்தாலும் எம்ஜிஆர் நினைவு வளைவு திறக்க தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மெரினா காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர். நினைவு வளைவு திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வக்கீல் தினேஷ் குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையின் அடையாளமாக மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை உள்ளது. இந்த சாலை முன்னர் தெற்கு கடற்கரை சாலை என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் இந்த சாலைக்கு வைக்கப்பட்டது. இந்த சாலையில் எழிலகம், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும், சென்னை பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களும் உள்ளன. இந்த சாலையில் தற்போது தமிழக அரசு ரூ.2.52 கோடி செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டி வருகிறது. இந்த நினைவு வளைவு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஏற்கனவே கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாக நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக ஒரு நினைவு வளைவு கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டம் 2001க்கும் முரணாக இந்த நினைவு வளைவு கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2009ல் அப்துல் பாரூக் என்பவரது வழக்கில் பொதுசாலையை ஆக்கிரமித்து எந்த கட்டுமானமோ, சிலைகளோ அமைக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாக தற்போது சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. ஆளும் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவதால் அரசியல் லாபத்துக்காகவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு நினைவு வளைவு கட்டப்பட்டு வருகிறது. எனவே, நெடுஞ்சாலை சட்டத்திற்கும், கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளுக்கும் முரணாக சட்டவிரோதமாக கட்டப்பட்டுவரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவு கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.துரைசாமி ஆஜராகி நெடுஞ்சாலை சட்டத்திற்கு முரணாக நிரந்தர கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதால் அகற்றியுள்ள நிலையில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக எம்.ஜி.ஆர். வளைவு அகற்ற வேண்டும் என்று வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண்,  நூற்றாண்டு வளைவு அமைக்கப்பட்டு வரும் இடம் நெடுஞ்சாலை சட்டத்தில் வராது என்றும், சென்னை மாநகராட்சி சாலையாகத்தான் கருத முடியும். நினைவு வளைவுக்கான கட்டுமானப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், நெடுஞ்சாலை சட்டத்தில் வராது, சென்னை மாநகராட்சியில் வருமென்றால் மாநகராட்சி சாலை என்பது இருபுறமும் உள்ள நடைபாதையும் சேர்ந்ததுதானே. அப்படி பார்த்தால் சென்னை மாநகராட்சி சட்டத்தின்படி எம்.ஜி.ஆர். வளைவையும் நடைபாதை ஆக்கிரமிப்பாகத்தான் கருதவேண்டும். சட்டப்பேரவை வைர விழா ஆர்ச் உள்ள பகுதியில் நடைபாதை பயன்பாடு அதிகமில்லை. அதனால் வைரவிழா வளைவுடன் எம்.ஜி.ஆர். வளைவை ஒப்பிட முடியாது.கடந்த 1977 முதல் 2007 வரை 40 ஆண்டுகள் அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தியபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.850 கோடி கொடுக்க உத்தரவிட்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை, கொள்கை முடிவும் எடுக்கவில்லை ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவர்களால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் கூட்டங்கள் மட்டும் நடத்தப்படுகிறது, ஆனால் எந்த ஆக்கப்பூர்வமான முடிவும் எடுக்கப்படுவதில்லை. உங்களது வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும். வழக்கு வரும் டிசம்பர் 17 தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதேசமயம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுமான பணிகளை முடித்தாலும், வழக்கு முடியும் வரை அதற்கு திறப்புவிழா நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

பாரம்பரிய கட்டிடம் சேதமடைந்தால் மாற்றலாம் மாணவரின் குணம் சேதமானால் திருத்த முடியாது:  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

பாரம்பரிய கட்டிடம் சேதமடைந்தால் திரும்ப கட்டி விடலாம். ஆனால், மாணவர்களின் குணங்கள் சேதமானால் அவர்களை திருத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு குறித்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் அய்யாதுரை என்பவர் குறுக்கிட்டு, எம்.ஜி.ஆர். வளைவு கட்டுவதால் மாநில கல்லூரி பாரம்பரிய கட்டிடம் பாதிக்கப்படாமல் காக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், மாநில கல்லூரி கட்டிடத்தில் மட்டுமே பாரம்பரியம் உள்ளது. அங்கிருக்கும் மாணவர்களிடம் நல்ல பண்புகள் மட்டும் இருப்பதாக தெரியவில்லை.

பேருந்து தினம் என கொண்டாடும்போது என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? சேதம் ஏற்பட்டால் பாரம்பரிய கட்டிடத்தை கூட மாற்றி அமைக்கலாம், ஆனால் மாணவர்களின் குணநலன்களுக்கு சேதம் ஏற்பட்டால் திருத்த முடியாது. நீதிபதிகள் என்றால் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குகளை மட்டும் விசாரித்து செல்வதாக நினைக்க வேண்டாம். சமூகத்தின் அடித்தட்டு வரை தெரிந்து வைத்துதான் இருக்கிறோம். மெரினா கடற்கரையில் 200 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது எத்தனை கடைகள் உள்ளன. அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதுதான் இதற்கு காரணம் என்று கருத்து தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: