நீதிபதிகளை விமர்சனம் செய்த தங்கதமிழ்ச்செல்வன் மீது அவமதிப்பு வழக்கு: அட்வகேட் ஜெனரல் அனுமதி

சென்னை:  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து மாற்றக்கோரி டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 19 பேர் தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, 19 பேருக்கும் பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதில் எஸ்.டி.கே.ஜக்கையன் அரசுக்கு ஆதரவாக மாறினார். இதையடுத்து, வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி எம்.சுந்தர், பேரவைத் தலைவரின் முடிவு சட்டவிரோதம் என்று ஜூன் 14ம் தேதி தீர்ப்பளித்தார். மாறுபட்ட தீர்ப்பால் வழக்கின் முடிவை எட்ட 3வது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  இந்நிலையில், தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் ஜூன் 17ம் தேதி தொலைக்காட்சி பேட்டிகளில் விமர்சனம் செய்தார். தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி குறித்து நேரடியாக விமர்சனம் செய்துள்ள அவர், தகுதி நீக்கத்தை எதிர்த்து தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார்.

 இந்நிலையில், தலைமை நீதிபதியை விமர்சனம் செய்த தங்கதமிழ்ச்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற பதிவகத்தில் வக்கீல் ஸ்ரீமதி புகார் மனு தாக்கல் செய்தார். இதேபோல் கண்ணன் என்பவரும் புகார் கொடுத்தார். கிரிமினல் நடவடிக்கை என்பதால் இந்த மனுக்கள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, தங்கதமிழ்ச்செல்வன் ஆஜராகுமாறு அட்வகேட் ஜெனரல் சம்மன் அனுப்பினார். அதன் அடிப்படையில், அட்வகேட் ஜெனரல் முன்பு ஆஜரான தங்கதமிழ்ச்செல்வன் தனது பேட்டிக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த அட்வகேட் ஜெனரல், மன்னிப்பு வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கே உள்ளது என்று கூறி  தங்கதமிழ்ச்செல்வனின் மன்னிப்பை ஏற்க மறுத்து உத்தரவிட்டார். இதையடுத்து, தங்கதமிழ்ச்செல்வன் மீது வக்கீல்கள் ஸ்ரீமதி மற்றும் கண்ணன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: