புயல் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் போர்வையில் சமூகவிரோதிகள் செயல்படுகிறார்கள்: அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

சென்னை: புயல் பாதித்த பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. அங்கு பொதுமக்கள் போர்வையில் சமூகவிரோதிகள் செயல்படுகிறார்கள் என்று அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னை, எழிலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் வேகமாக நடைபெறவில்லை என்று சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதற்கு பொதுமக்கள் முக்கியத்துவம் தர தேவையில்லை. சிலர் வீட்டிலேயே உட்கார்ந்து சமூக வலைதளங்களில், நாகப்பட்டினம் மாவட்டம் எந்த திசையில் உள்ளன. அங்கு எந்த பகுதி பாதிப்பு என நேரிலே பார்க்காமல் விமர்சனம் செய்கிறார்கள்.

இதுபோன்ற பேரிடர் காலங்களில் இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, புயல் பாதித்த பகுதிகள் போர்க்களம்போல் காட்சி அளிக்கிறது. தண்ணீர் உடனே கொண்டு வருகிறார்கள், ஜெனரேட்டர் கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் போர்வையில் சமூக விரோதிகள் சிலர் செயல்படுகிறார்கள். சாலைமறியல் செய்தால்தான் அரசின் கவனத்துக்கு செல்லும் திசை திருப்புகிறார்கள். பேரிடர் மேலாண்மை துறைக்கு இதற்கு முன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது இல்லை. தனியாக நிதி ஒதுக்கி, நவீன உபகரணங்கள் கொடுக்கப்பட்டதால்  சீரமைப்பு பணிகளை விரைவாக ஏற்படுத்த முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: