குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட உணவுத்துறை அதிகாரி மீண்டும் ஜாமீன் கோரி மனு

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட உணவுத்துறை அதிகாரி 3வது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்ய பல முக்கிய போலீஸ் அதிகாரிகள் பல கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் குட்கா உற்பத்தியாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் மற்றும் லஞ்சம் வாங்கிக்கொண்டு குட்கா விற்பனை செய்ய அரசு தரப்பில் உடந்தையாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவகுமார் மற்றும் கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 6 பேரும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து, சிவகுமார் மீண்டும் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கடந்த வாரம் மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிபதியோ, மீண்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் சிபிஐ கடந்த வாரம் குட்கா ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனைதொடர்ந்து உணவுத்துறை அதிகாரி சிவகுமார் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி 3வது முறையாக நேற்று சென்னை, சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சிவகுமார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: