2018-19ம் ஆண்டிற்கான சித்தா கவுன்சலிங் தொடங்கியது

சென்னை: 2018-2019ம் ஆண்டிற்கான சித்த மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கப்பட்டது. ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர, சென்னை உயர்நீதிமன்றம் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்தது. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை வழங்கப்பட்டது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககத்தில் நேற்று சித்தா,ஆயுர்வேதா, யுனானி,ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட 5 படிப்புகளக்கான கலந்தாய்வு தொடங்கியது. அதில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 390 இடங்கள், சுயநிதிக்கல்லூரிகளில் உள்ள 1423 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க அழைப்பு அனுப்பப்பட்டது. முதல் நாளான நேற்று காலை சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடந்தது. அதில் 57 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். 23 பேருக்கு இடஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று இரண்டு கட்டமாக நடந்தது. அதில் 198 கட்ஆப் மதிப்பெண் முதல் 185 கட் ஆப்  பெற்றவர்கள் காலையிலும், 184.75 முதல் 174 கட்ஆப் மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு பிற்பகலில் கலந்தாய்வு நடந்தது. இன்று காலை 173.75 முதல் 168 கட்ஆப் மதிப்பெண் வரையும், 167.75 முதல் 161 கட் ஆப் மதிப்பெண் வரை பெற்றவர்கள் பிற்பகலில் பங்கேற்கின்றனர். மேலும் நேற்று தொடங்கிய கலந்தாய்வு 23 ம் தேதி வரை நடக்கும்.கலந்தாய்வு கட்டணமாக ரூ.500,கல்வி கட்டணத்தில் ரூ.5000 கலந்தாய்வில் கலந்து கொள்ளும் போது மாணவர்கள் செலுத்த வேண்டும். மேலும் டிடி கொண்டு வர முடியாதவர்கள் பணமாகவும் செலுத்தலாம். இவ்வாறு இந்திய மருத்துவத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: