திமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் 1 மாத ஊதியம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி மற்றும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள் 1 மாத ஊதியம் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கஜா புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்டன. புயல் தாக்கிய தகவல் அறிந்ததும் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேடியாக சென்று, 2 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார். நிவாரண பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினார். சென்னை திரும்பியதும் திமுக சார்பில் நிவாரண நிதி உதவி அறிவித்தார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: கஜா புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, விவசாயிகள், மீனவர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெருந் துயரத்திற்கும், மிகக் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள். புயலும் மழையும் பொதுமக்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், திமுக அறக்கட்டளையிலிருந்து ரூ.1 கோடியும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 1 மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: