குடி பழக்கத்தால் திருமணம் செய்ய மறுப்பு காதலியின் கழுத்தை அறுத்த காதலன் விஷம் குடித்து சரண்

சென்னை : திருமணத்துக்கு மறுத்த காதலியை வீடு புகுந்து கழுத்தை அறுத்த காதலன், விஷம் குடித்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.  சென்னை திருவொற்றியூர் சாத்துமாநகர், காந்தி நகரை சேர்ந்தவர் வேணுகோபால், பெயின்டர். இவரது மகள் பாரதி (26). ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு தாங்கல் தெருவில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளை கேட் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பாலாஜி (28). சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தாங்கல் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு, பாலாஜி அடிக்கடி செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் பாட்டி வீட்டுக்கு சென்ற பாலாஜி, புதிய பைக் வாங்குவதற்காக பாரதி வேலை செய்யும் ஷோரூமுக்கு சென்றுள்ளார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரிந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இருவரும் உறுதியாக இருந்ததால் அவர்களது திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், பாலாஜி இந்து மதத்தை சேர்ந்தவர். பாரதி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இதனால், இருவீட்டார் இடையே யார் மதம் மாறுவது என பிரச்னை ஏற்பட்டது. இந்த வேளையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் பாலாஜி, பாரதியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவர், குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் பாரதி, மது பழக்கம் உள்ள பாலாஜியை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலாஜி, பாரதியை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் பேச மறுத்துவிட்டார். இதனால்,  பாரதி மீது பாலாஜிக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சாத்துமா நகரில் உள்ள பாரதி வீட்டுக்கு பாலாஜி சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். எனவே பாரதி, அவரை சந்திக்க மறுத்துவிட்டார். இதில் விரக்தியடைந்த பாலாஜி, தான் மறைத்து எடுத்துச்சென்ற கத்தியால் பாரதியின் கழுத்தை சரமாரியாக அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த பாரதி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பாரதியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுயநினைவு இல்லாத நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பாரதியின் தந்தை வேணுகோபால் கொடுத்துள்ள புகாரின்பேரில் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை தேடி வந்தார். இதற்கிடையில், நேற்று காலை பாலாஜி திருவொற்றியூர் காவல் நிலையம் சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, ‘திருமணம் செய்ய மறுத்ததால், பாரதியை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்ள மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டேன்’’ என்று கூறியுள்ளார். உடனே போலீசார், அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: