கஜா புயல் தாக்கி 4 நாட்களாகியும் தீராத துயரம் டெல்டாவில் மக்கள் கதறல்: பால், குடிநீர், காய்கறிகள் கிடைக்காமல் தவிப்பு; வாகனங்களை மறித்து உணவு கேட்கும் பரிதாபம்

திருச்சி: கஜா புயல் தாக்கி 4 நாட்களாகியும் டெல்டாவில் நிவாரணப்பணிகள் நடக்காததால் தீராத துயரத்தில் மக்கள் கதறுகின்றனர். அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. பால், குடிநீர், காய்கறிகள், மண்ணெண்ணெய் கிைடக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அவ்வழியாக வரும் வாகனங்களை பொதுமக்கள் மறித்து உணவு கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கஜா புயல் 15ம் தேதி  நள்ளிரவு நாகைக்கும் வேதாரண்யத்திற்கும் இடையே கரையை கடந்தது. புயல்  சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பயங்கரமாக வீசியதால் நாகை முதல்  வேதாரண்யம் வரை பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால்  10 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மின் கம்பங்களும் 200க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளும் அடியோடு விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 5 நாட்களாகியும் மாவட்டத்தில் சில கிராமங்களில் எந்தவித நிவாரண பணிகளும் நடக்கவில்லை. அதிகாரிகள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வேதாரண்யம் பகுதியில் தினமும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 5 நாட்கள் ஆகியும் வேதாரண்யம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

200 கிராமங்கள் இருளில் மூழ்கியது: 200 கிராமங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்துள்ளன. டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்துள்ளது. இதனால் 200 கிராமங்களும் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைக்கில் நாகைக்கு சென்று வாடகைக்கு பேட்டரி வாங்கி வந்து கிராமங்களுக்கு மின்விளக்கை எரிய வைத்துள்ளனர். சில கிராமங்களில் வீடுகள் முழுமையாக சேதமடைந்ததால் அவர்கள் வீதியில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அரசு எந்தவித நிவாரண உதவிகளும் செய்யாததால், கிராமமக்கள் ஒன்று சேர்ந்து சாலையில் சமையல் செய்கின்றனர். வேதாரண்யம் வள்ளியம்மை சாலையில் 20 குடும்பத்தினர் சாலையில் சமையல் செய்தனர். வேதாரண்யம் பகுதியில் இன்னும் சாலை சீராகாததால் காய்கறிகள் வரத்து இல்லை. நாகை மார்க்கத்தில் மட்டும் சாலை சீரமைக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு பால், காய்கறி போன்றவற்றை வியாபாரிகள் கொண்டு செல்ல அச்சத்தில் உள்ளனர். நேற்று இந்த மார்க்கத்தில் ஆங்காங்கே மக்கள் மறியலில் ஈடுபட்டனர். கார், டூவீலர்களில் செல்பவர்களை மறித்து காரில் உணவு பொருள் இருக்கிறதா என கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

300 மாடுகள் பலி: வேதாரண்யம் அருகே  கோடியக்காடு, சிறுதலைகாடு அதிராம்பட்டினம் அருகே உள்ள மழவேனிற்காடு ஆகிய இடங்களில் 300 மாடுகள் பலியாகி உள்ளன. இவற்றை எடுத்து புதைக்கவே முடியாத நிலை உள்ளது. மழவேனிற்காட்டில் ஒரு கோழிப்பண்ணை தரைமட்டமானது. இதில் பலியான 5 ஆயிரம் கோழிகளையும் அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டனர். புதைக்கப்படாத கால்நடைகளால் வேதாரண்யம் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கால்நடைகளுக்கும் தொற்று நோய் ஏற்பட்டு உள்ளது. இதனால் வேதாரண்யம் கால்நடை ஆஸ்பத்திரியில் விவசாயிகள் கால்நடைகளுடன் குவிந்த வண்ணம் உள்ளனர். வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் நோயாளிகள் கூட்டம் அதிக அளவு உள்ளது. இங்கு பகலில் ஜெனரேட்டர் இயக்கப்படுவதில்லை. இரவில் மட்டும் இயக்குகிறார்கள். காய்ச்சல் பாதிப்பால் தினமும் 500க்கும் அதிகமானவர்கள் இங்கு வருகிறார்கள். இவர்களை கவனிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை. இதனால் மக்கள் பசி பட்டினியுடன் காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருகிறார்கள். வேதாரண்யம் அடுத்து தலைஞாயிறு பகுதியில் இருந்து 4 கிமீ தொலைவில் வண்டல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 425 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் மீன் பிடித்தல்   வண்டல் பகுதி  அடப்பாறு, நெல்லாறு, ராஜன் வாய்க்கால் ஆகிய 3 வாய்க்கால்கள் சூழப்பட்ட பகுதியாக உள்ளது. போக்குவரத்து வசதிக்காக படகு உள்ளது. படகில் தலைஞாயிறு வந்து மீண்டும் வண்டலுக்கு செல்ல வேண்டும்.

கஜா புயல் வண்டல் பகுதியையும் வாரி சுருட்டியுள்ளது. வண்டலில் போடப்பட்டிருந்த மின்கம்பங்கள் அனைத்தும் சேதமாகி உள்ளது. பொதுமக்கள் வளர்த்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தும் இறந்து கிடப்பதால் அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. குடிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் வசதி இல்லாமல் திக்கற்று தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் கூறுகையில், புயல் தாக்கி 5 நாட்கள் ஆனநிலையிலும் இப்பகுதிக்கு யாரும் வரவில்லை. இங்குள்ள ரேஷன் கடையில் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை கொண்டு எப்படி சாப்பிடுவது. இதனால் 4 நாட்களாக பால் இல்லாத டீ மட்டும் போட்டு குடித்து வருகின்றனர். ஆடு, மாடுகள் இறந்து 4 நாட்களாகியும் அப்பறப்படுத்தவோ, புதைக்கவோ வழியின்றி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார். தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை வரை பல இடங்களில் மின் இணைப்பு கொடுக்கவில்லை. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் எந்த ஒரு பணியும் செய்ய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக குடிநீர் வழங்க முடியவில்லை. ஒரு லிட்டர் பால் ரூ.100க்கு விற்பனை: மின்சாரம இல்லாததால் பால் வாங்கி வீடுகளில், கடைகளில் இருப்பு வைத்து விற்க முடியவில்லை. மேற்கண்ட பகுதிகளில் இன்னும் கடைகள் திறக்கப்படவில்லை.

குறிப்பாக பெட்டிக்கடைகள், டீக்கடைகள் கூட இல்லை. அதிராம்பட்டினம் பகுதியில் வழக்கமாக வீடுகளுக்கு பால் கொடுப்பவர்கள் 1 லிட்டர் வாங்குபவர்களுக்கு அரை லிட்டர் என்ற அளவில் குறைவாகவே கொடுத்தனர். லிட்டர் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் நேற்று ரூ.50 வரை விற்கப்பட்டது கடைகள் இல்லாததால் பிளாக்கில் குடிநீர், மண்ணெண்ணெய் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று காலை வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிலர் ஜெனரேட்டர்களை கொண்டு வந்து அதன் மூலம் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை இயக்குகிறார்கள். இதற்கு 15 நிமிடத்திற்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கின்றனர். மக்கள் ஆங்காங்கே குடிநீர், உணவின்றி தவித்து வரும் நிலையில் கடையில் புகுந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கடையை திறக்க வியாபாரிகள் மறுக்கின்றனர். குடிநீர் வசதி இல்லாததால் ஆங்காங்கே உள்ள கிணறு, குளத்தில் தண்ணீர் எடுத்து குடிக்கின்றனர். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 2,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இடிந்து கிடக்கும் வீடுகளை அந்த மக்கள் சீரமைக்கவும் முன்வரவில்லை. வீடுகளை சீரமைத்துவிட்டால் அல்லது இடிபாடுகளை அப்புறப்படுத்தி விட்டால் நமக்கு நிவாரணம் கிடைக்காது என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர்.

செல்போன் ரீசார்ஜ் செய்ய 50 ரூபாய்

அதிராம்பட்டினம் பகுதியில், வீடுகளில் உள்ள இன்வெர்ட்டர் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதற்கு ரூ.400, ரூ.500 என கட்டணம் வசூலிக்கின்றனர். ஜெனரேட்டர் வசதி உள்ள கடைகளில் மக்கள் இன்வெர்ட்டர் பேட்டரிகளுடன் காத்திருந்து ரீசார்ஜ் செய்து செல்கிறார்கள். செல்போன்களுக்கு சார்ஜ் செய்ய ரூ.40 முதல் ரூ.50 வரை வசூலிக்கின்றனர்.

மீண்டும் மழையால் பீதி

கஜா புயல் தாக்கியதால் ஏற்பட்ட மனவேதனையில் அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்களை மேலும் சோதிப்பதுபோல் நேற்று அதிகாலை 2.30 மணி முதல் 5 மணி வரை மழை பெய்தது. இதனால் மீண்டும் மழை பெய்தால் நாம் என்ன செய்வதென்று புரியாமல் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: