×

மத்திய அரசுடன் மோதல் பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு

* ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முடிவு
* 9 மணி நேரம் அனல் பறந்த விவாதம்

மும்பை: கையிருப்பில் உள்ள நிதியை மத்திய அரசுக்கு கூடுதலாக வழங்க நிர்பந்தம் உட்பட மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்ட விவகாரங்கள் குறித்து தீர்வு காண குழுக்கள் அமைக்க ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  வட்டி விகிதம் நிர்ணயம், நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை தாராளம் ஆக்குவது என பல்வேறு விஷயங்களில் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே புகைந்து வந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியது. இதுதவிர, ரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக 3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா செய்வாரா அல்லது மத்திய அரசுடனான மோதல் விவகாரங்களில் தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டம் உர்ஜித் படேல் தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் துணை கவர்னர்கள், பொருளாதார விவகார செயலாளர் எஸ்.சி.கார்க் உள்ளிட்ட 18 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 9 மணி நேரத்துக்கு மேலாக நேற்று இரவு வரை கூட்டம் நீடித்தது.   இதில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் தருவது குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது, இந்த நிறுவனங்களின் கடன் சொத்துக்களை மறு சீரமைத்தல், நலிந்த நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் கடனுதவி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுபோல் வராக்கடனில் சிக்கித்தவிக்கும், 11 பொதுத்துறை வங்கிகள் மீதான தடைகளால் அவை கடன் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியிடம் 9.6 லட்சம் கோடி நிதி உள்ளது. இதில் ₹3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாக பிரச்னை எழுந்தது.

இது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  முடிவாக, மத்திய அரசுக்கு உபரி நிதி வழங்குவது உட்பட ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விஷயங்களில் சுமூக தீர்வு காண்பதற்கு குழு ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வரும் 22ம் தேதி அரசு பத்திரங்களை வாங்குவதன் மூலம் 8,000 கோடி நிதியை ரிசர்வ் வங்கி வழங்க உள்ளது.  மத்திய அரசுடன் மோதல் உள்ள விஷயங்களில் குறிப்பாக உபரி நிதி வழங்குதல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வழங்கலை அதிகரித்தல், ரிசர்வ் வங்கின் நிர்வாக அமைப்பு, பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை குறைப்பது உள்ளிட்ட விஷயங்களில் குழு தீர்வு காணும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Committee ,government , Central Government, Reserve Bank
× RELATED தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை...