வெள்ள பாதிப்பை பார்வையிடாத அமைச்சர்கள் முற்றுகையிட்ட மக்களை கெட்டவார்த்தையால் திட்டிய எம்பி

ஒரத்தநாடு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரத்தநாடு பகுதியை பார்வையிடாமல் பேராவூரணிக்கு சென்ற அமைச்சர்களின் கார்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அதிமுக எம்பி பொதுமக்களை கெட்ட வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, தஞ்சை எம்பி பரசுராமன், மாநிலங்களவை எம்பி வைத்திலிங்கம், கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பட்டுக்கோட்டை சாலையில் ேநற்று காலை சென்றனர்.

எம்பி வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காடு குருமன் தெருவில் அமைச்சர்கள், எம்பிக்கள் சென்ற கார்களை திருமங்கலக்கோட்டை, தொண்டராம்பட்டு, வடசேரி, பூவத்தூர் கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழிமறித்தனர். பின்னர் பேரழிவை சந்தித்த ஒரத்தநாடு பகுதியை பார்வையிடாமல் புறக்கணித்து விட்டு நீங்கள் எப்படி செல்லலாம், ஒரத்தநாடு பகுதியில் எந்த பாதிப்பும் இல்லையென எம்பி வைத்திலிங்கம் எப்படி தெரிவித்தார் என்று அமைச்சர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பின்னால் வந்த காரில் இருந்து இறங்கி வந்த வைத்திலிங்கத்திடம் பெண்கள் நேருக்கு நேராக வந்து, ஒரத்தநாடு பகுதி பாதிக்கவில்லையென நீ எப்படி சொல்லலாம், நீ நல்லாவே இருக்க மாட்டே... எங்களிடம் 15 வருஷமா ஓட்டு வாங்கி எங்களை ஏமாத்துற. பதவியில் இருந்தபோது நீயும், உன் குடும்பமும் நல்லா இருந்தீங்க. இப்போது எங்களை பழிவாங்க துடிக்கிற, நீ நல்லாவே இருக்க மாட்டே, உன் குடும்பம் நல்லா இருக்காது என்று சாபமிட்டனர். அதை கேட்டு ஆவேசமடைந்த வைத்திலிங்கம், பொதுமக்களை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டினார். ‘எவன் சொன்னான் அப்படி, நான் சொல்லவே இல்ல‘ என்று கூறினார். வைத்திலிங்கத்தின் இந்த அவதூறு பேச்சை கேட்ட அமைச்சர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதைதொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட திருமங்கலக்கோட்டை பகுதியை பார்வையிட அமைச்சர்களை பொதுமக்கள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். அப்பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாட்டை சேர்ந்தவருமான எம்பி வைத்திலிங்கத்தின் சொந்த ஊரிலேயே அமைச்சர்களை பொதுமக்கள் வழிமறித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: