அரியானாவில் 6,400 கோடியில் அமைத்த சாலையை திறந்தார் மோடி

குருகிராம்: அரியானாவில் குண்ட்லி-மானேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ் சாலை, பல்லாப்கர்-முஜேசர் மெட்ரோ ரயில் வழித்தடம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்த பிரதமர் மோடி,  விஸ்வகர்மா திறன் பல்கலைக் கழகத்துக்கும் அடிக்கல் நாட்டினார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள சுல்தான் கிராமத்துக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு 135.65 கிமீ தூரத்துக்கு 6,400 கோடி செலவில் அமைக்கப்பட்ட குண்ட்லி-மானேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இச்சாலை திட்டத்துக்காக 3,846 ஏக்கர் நிலம் கையகப்படுத்த 2,788 கோடி செலவழிக்கப்பட்டது. இந்த விரைவுச் சாலை திட்டம் மூலம், லாரிகள் டெல்லிக்குள் நுழையாமலேயே கடந்து செல்ல முடியும். இதனால், டெல்லியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசு ஆகியவை குறையும். மேலும், அரியானாவின், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை இணைக்கும் விரைவு போக்குவரத்து சாலையாகவும் இது பயன்படும்.    கேஎம்பி திட்டம் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் மோடி பார்வையிட்டார். இந்த திட்ட பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் விளக்கினர். பிரதமருடன் அரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா, முதல்வர் மனோகர் லால் கத்தார், மத்திய அமைச்சர்கள் ராவ் இந்தர்ஜித் சிங், பிரேந்தர் சிங், ஆகியோர் உடன் சென்றனர்.

மேலும் பல்லாப்கர்-முஜேசர் இடையிலான 3.2 கி.மீ தூர மெட்ரோ ரயில் திட்டத்தையும் சுல்தான்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் 580 கோடியில் முடிக்கப்பட்டது. அரியானாவில் குருகிராம், பரிதாபாத், பகதுர்கர் ஆகிய நகரங்களை அடுத்து மெட்ரோ ரயில் இணைப்பு பெற்ற 4வது நகரமாக பல்லாப்கர் மாறியுள்ளது. சுல்தான்பூரில் இருந்து காணொளி காட்சி மூலம்  விஸ்வகர்மா திறன் பல்கலைக் கழகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த பல்கலைக்கழகம் 82.5 ஏக்கர் நிலத்தில் 989 கோடி செலவில் கட்டப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

கேஎம்பி விரைவுச் சாலை திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த திட்டம் 9 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. முந்தைய அரசின் செயல்பாடுகளால் இத்திட்டம் முடிய 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் விளையாட்டுகள் நடந்தபோதே இந்த விரைவு சாலையை பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. காமன்வெல்த் விளையாட்டில் முந்தைய அரசு என்ன செய்ததோ, அதேதான் இந்த சாலை திட்டத்திலும் நடந்தது.

இத்திட்டத்தில் அரசு பணம் எப்படி வீணடிக்கப்பட்டது. மக்களுக்கு எப்படி அநீதி இழைக்கப்பட்டது என்பது பற்றி ஆய்வே நடத்தலாம். இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, ரூ.1,200 கோடியில் முடிக்க திட்டமிடப்பட்டது. பல ஆண்டுகள் தாமதத்தால் இதன் செலவு 3 மடங்கு அதிகரித்தது. கடந்த 2014ம் ஆண்டு தே.ஜ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசும், அரியானா அரசும் இத்திட்டம் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்து விரைவில் முடித்தது.

இந்த விரைவுச் சாலை திட்டம் குறித்த காலத்தில் முடிந்திருந்தால், டெல்லியில் போக்குவரத்து மேம்பட்டிருக்கும். இத்திட்டம் நிறைவடைந்தததன் மூலம் அரியானா அனைத்து துறையிலும் வளர்ச்சியடையும். நாடு முழுவதும் 33 ஆயிரம் கி.மீ நெடுஞ்சாலையை மேம்படுத்த எனது அரசு ரூ.3 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: