தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் நேற்று, போபாலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட விவகாரத்தில் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உட்பட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் 3வது நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகள் காலி என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.  எனவே, காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு எதிர்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்தியப்பிரதேசம் போபாலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும். புயல் எச்சரிக்கை தொடர்பாக இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதை தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் விமர்சித்தனர். ஆனால், எங்களது திட்டத்தின் அடிப்படையில் இடைத்தேர்தலை ஒத்திவைக்காமல் இருந்திருந்தால் தற்போது ஏற்பட்ட கஜா புயலால் தேர்தலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். அதனால்தான் முன்னெச்சரிக்கையாக இடைத்தேர்தலை ஒத்திவைத்தோம்.

இதனால், தற்போது தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிக்கை வந்தவுடன் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி உடனடியாக அறிவிக்கப்படும்” என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: