சபரிமலை தரிசன சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த சீராய்வு மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று 3வது முறையாக நிராகரித்தது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  

இதையடுத்து கோரிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம் சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், அதுகுறித்து வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.  இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா நேற்று ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், “சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் உச்சக்கட்டமாக சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதனால்  சீராய்வு மனுக்கள் அனைத்தையும் அவசர வழக்காக எடுத்து விசாரித்து முந்தைய தீர்ப்பில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என கூறியிருந்தார். ஆனால் மனுவை பரிசீலனை செய்த தலைமை நீதிபதி, தனது உத்தரவில், “சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. அதேபோல் முந்தைய தீர்ப்பில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது. ஜன.22ல் தான்  விசாரணை நடக்கும்’’ என்றார். இதுவரை சீராய்வு மனுக்கள் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் 3முறை நிராகரித்துள்ளது.

‘தீர்ப்பை  அமல்படுத்த அவகாசம் தேவை’

திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த எங்களுக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும். மேலும் சபரிமலையில் தற்போது தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வருவதால் எங்களால் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த முடியவில்லை” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: