பாஜ.வுக்கு எதிராக மெகா கூட்டணி எதிர்க்கட்சிகளின் நாளை மறுநாள் கூட்டம் ஒத்திவைப்பு: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

கொல்கத்தா: பா.ஜ.வுக்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து டெல்லியில் 22ம் தேதி நடக்கவிருந்த எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஆந்திராவுக்கு சிறப்பு அந்துஸ்து அளிக்கப்படாததால், தே.ஜ கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இதையடுத்து, பா.ஜ.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இறங்கினார். இதற்காக அவர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

்அடுத்த மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது பற்றி ஆலோசிக்க டெல்லியில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அவர் நேற்று கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்தித்து பேசினார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: டெல்லியில் நாளை மறுநாள் நடத்தப்படுவதாக இருந்த எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு 22ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்துக்கு முன்பாக எதிர்கட்சிகளின் கூட்டத்தை கூட்ட விரும்புகிறோம்.

இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். பாஜ.வை எதிர்ப்பவர்கள் எங்களுடன் சேர்ந்த விவாதிக்கலாம். சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி, சிஏஜி போன்றவை தே.ஜ கூட்டணியில் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. நாட்டை பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்து நாங்கள் ஆலோசிப்போம். இவ்வாறு அவர் கூறினார். சிபிஐ நடவடிக்கைக்கான அனுமதியை ஆந்திராவும், மேற்கு வங்கமும் சமீபத்தில் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: