திருச்சி அருகே டயர் வெடித்ததால் அரசு பஸ் மீது கார் பயங்கர மோதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: சிறுவனுக்கு தீவிர சிகிச்சை

திருச்சி:  தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிறுதொண்டு நல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் ரத்தின பாண்டியன் (45). விவசாயி. இவரது மனைவி மேத்லின் சோபனா (35). இவர்களது மகள் சிறின் (13), மகன் ஷாம் (9). சென்னையில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் ரமேஷ் ரத்தினபாண்டியன் நேற்று அதிகாலை காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டி வந்தார். இவர்களுடன் அவரது தாய் சாந்தியும் (67) வந்துள்ளார்.

மதுரை- திருச்சி மெயின் ரோடு மணிகண்டம் அருகே காலை 7.30க்கு வந்த போது திடீர் என காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலை தடுப்பில் மோதியதோடு, அவ்வழியே திருச்சியில் இருந்து பொன்னமராவதி சென்ற அரசு பஸ் மீது படுவேகமாக மோதி புகுந்து நின்றது.

இதில் பஸ் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த மேத்லின் சோபனா, சாந்தி ஆகியோர் அதேஇடத்தில் உயிரிழந்தனர். ரமேஷ் ரத்தினபாண்டியன், மற்றும் மகள், மகன் கார் இடிபாட்டுக்குள் சிக்கி தவித்தனர். மணிகண்டம் போலீசார், 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ரமேஷ் ரத்தினபாண்டியன், மகள் சிறின் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். சிறுவன் ஷாமுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமைச்சர் உதவி: மணிகண்டம் அருகே காலை 7.30 மணிக்கு விபத்து நடந்த போது அவ்வழியாக திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் சென்று  கொண்டிருந்தார்.

விபத்து நடந்ததை பார்த்த அமைச்சர், காரை நிறுத்தி இறங்கி, போலீஸ் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். தனது பாதுகாவலர்கள் உதவியுடன் கார் இடிபாட்டுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை மீட்டு பாதுகாவலர் வாகனத்தில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தார். பஸ் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

பஸ்சில் சிக்கி தலை துண்டானது

மோதிய வேகத்தில் அரசு பஸ் சக்கரத்திற்குள் கார் புகுந்ததால் டிரைவர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தியுள்ளார். இதனால் காரின் முன் இருக்கையில் இருந்த சாந்தி தூக்கி எறியப்பட்டு ஊர் பெயர் பலகைக்கு கீழ் அவரது தலை துண்டாகி சிக்கிக் கொண்டது. உடம்பு மட்டும் காருக்குள் இருந்தது. இதே போல் மேத்லின் சோபனா தலையும் நசுங்கி இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: