×

நாங்கள்தான் ஆட்சி செய்கிறோம் நாடாளுமன்ற விவகார குழுவில் எங்களை அதிகம் நியமிக்க வேண்டும் : ராஜபக்சே தரப்பு வலியுறுத்தல்

கொழும்பு : இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான தேர்வு குழுவில் எங்களை அதிகளவில் நியமிக்க வேண்டும் என ராஜபக்சே தரப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த அக்டோபர் 26ம் தேதி திடீரென ரணில் விக்ரமசிங்கை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்த அவர் ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். அதிபரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று கடந்த வாரம் தீர்ப்பு கூறியது.
இதனையடுத்து, மிகுந்த பதற்றத்துக்கு இடையே நாடாளுமன்றம் கூடியது. இதில், புதிய பிரதமரான ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜபக்சே தோல்வி அடைந்தார். 2வது முறையாக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். மிளகாய் பொடியை தூவியும், நாற்காலிகளை வீசியும் ரகளையில் ஈடுபட்டதோடு, சபாநாயகர் ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அதிபர் சிறிசேனா அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி தலைவர்களிடமும் அவர் வலியுறுத்தினார். மூன்றாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வகையில் நேற்று காலை நாடாளுமன்றம் கூடியது.  அவை தொடங்கியவுடன் பேசிய துணை சபாநாயகர் அனந்த குமார, “ நாடாளுமன்ற விவகாரங்கள் தேர்வு குழு அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீர்மானித்துள்ளது” என்றார். 10 நிமிடங்கள் அவை நடந்த நிலையில் 23ம் தேதி வரை அவையை ஒத்திவைத்து துணை சபாநாயகர் உத்தரவிட்டார்.

முன்னதாக அவை நடவடிக்கையின்போது ராஜபக்சே சார்பில் பேசிய தினேஷ் குணவர்த்தனா கூறுகையில், “எங்கள் அரசுதான் இப்ேபாது ஆட்சியில் உள்ளது. எனவே, தேர்வு குழுவில் எங்கள் உறுப்பினர்கள் அதிகளவில் இடம்பெற வேண்டும்” என்றார். ஆனால், ஜேவிபி தலைவர் அனுரா குமார திசநாயகே, ‘‘ராஜபக்சே அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. பெரும்பான்மை உள்ள கட்சியின் உறுப்பினர்கள்தான் தேர்வு குழுவில் இடம்பெற வேண்டும்” என்றார். நேற்றைய நாடாளுமன்ற கூட்டம் எவ்வித இடையூறும் இன்றி அமைதியாக முடிந்தது.

நாடாளுமன்றத்தில் வன்முறை எம்பி.க்கள் மீது நடவடிக்கை

கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சபாநாயகர் கரூ ஜெயசூர்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மோசமான மற்றும் சட்ட விரோதமான நடவடிக்கைகளான, அவைக்குள்  ஆயுதங்கள் எடுத்து வருவது, மிளகாய் பொடி தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது, கைகலப்பு மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்ட உறுப்பினர்கள் குறித்த அறிக்கை கட்சி தலைவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parliamentary affairs committee ,Rajapaksa , parliamentary affairs, committee to appoint, Rajapaksa's side assertion
× RELATED அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக பணம்...