கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை விறுவிறு

மதுரை: கார்த்திகை தீபத்திருநாள் அகல் விளக்குகள் விற்பனை, மதுரையில்  விறுவிறுப்பாக நடந்து வருகிறது.கார்த்திகை தீபத்திருநாளின் போது,  கோயில்கள் மற்றும் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபடுகின்றனர். இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாள் வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மதுரையில் தற்போது அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுரையில் மாட்டுத்தாவணி, பெத்தானியபுரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கார்த்திகை திருநாளுக்கு  இன்னும் 4 நாட்களே உள்ளதால், மண்ணால் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் மாசி வீதிகள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

சிறிய அளவிலான அகல் விளக்குகள், குத்து விளக்கு, தாமரை விளக்கு, துளசி மாடம், பஞ்சமுக விளக்கு, விநாயகர் விளக்கு, காமாட்சி விளக்கு பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட விளக்குகளின் விற்பனை சூடு பிடித்து வருகிறது.வியாபாரிகள் கூறுகையில், ‘மதுரையில் 25க்கும் மேற்பட்ட  இடங்களில் அகல் விளக்குகள் தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு வருகின்றன. வழக்கம் போல், சிறிய அளவிலான அகல் விளக்குகளே அதிகம் விற்பனையாகின்றன. அளவைப் பொறுத்து  ரூ.3 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. மெழுகு விளக்குகள் வந்தாலும், மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளுக்கு மவுசு குறையாமல் உள்ளது’’ என்று தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: